பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

குமரியின் மூக்குத்தி

பேசினார். "உங்கள் வீடுகளில் திருட்டுப் போகும் சொத்தின் மதிப்பைக் குறைவாகச் சொல்லுங்கள். அதனால் திருட்டைத் தொழிலாக கடத்துபவர்களுக்கு லாபம் உண்டு. உங்களுக்கும் அதில் பங்கு தரச் சொல்லுகிறேன்” என்றார், அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஒன்றும் இல்லாததற்குக் கொஞ்சமாவது கிடைக்குமல்லவா?

இந்த ரகசிய ஏற்பாட்டால் அரசாங்கத்தின் வரும்படி குறைந்தது. மறுபடியும் மந்திராலோசனை நடை பெற்றது. "திருட்டுத் தொழிலை நடத்துகிறவர்கள் அபராதம் செலுத்துகிறார்கள். அபராதம் என்று சொல்வதனால் சமுதாயத்தில் அவர்களைச் சற்றே தாழ்வாகக் கருதுகிறார்கள். இனி அதைக் கட்டணம் என்று சொல்வது நல்லது. அதற்கு ஏற்றபடி சட்டத்தின் வாசகத்தைத் திருத்துவது எளிது” என்று காமதேநுவாகிய சேனாபதி தந்திரம் கூறினர். அப்படியே நடைபெற்றது.

மறுபடியும் அந்தரங்க ஆலோசனை கடந்தது. சேனாபதிதான் தந்திரம் கூறினார். மற்றவர்களுக்கு என்ன தெரியும்?

"இப்போது திருட்டுத் தொழிலாளர்கள் கட்டணம் செலுத்துவதால் நாலு பேர் காண வீதியில் உலவுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு ஊக்கம் போதாது.”

"எப்படி ஊக்கம் உண்டாக்குவது?"

"அரசாங்கத்தில் விளம்பரப் பகுதி ஒன்றை நிறுவ வேண்டும். திருட்டுத் தொழில் செய்யும் கனவான்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.”

"அற்புதமான யோசனை! உம் மூளையின் பெருமையை எப்படிப் பாராட்டுகிறது?" என்று குதூகலத்தால் துள்ளினர் அரசர்.

"இந்த நாய்க்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் மகா ராஜாவின் அன்பு விசேஷம்" என்று தம் பணிவைக் காட்டினார் சேனாபதி.