பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

குமரியின் மூக்குத்தி

காரிகள் அவரைப் பொறுத்தமட்டில் ஒன்றும் செய்யாமல் இருந்தார்கள்.

ஒரு சமயம் ஒரு விறகுவெட்டி மிகவும் பெரிதாக, வைரம் பாய்ந்ததாக ஒரு சந்தனக்கட்டையைக் கொண்டு வந்து கொடுத்தான். நல்ல பவுன்நிறம் என்று சொல்ல வேண்டும். அதைக் கண்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அவனிடம் ஒன்றும் கேட்காமலே ஐம்பது ரூபாயைத் தூக்கிக்கொண்டு வந்து கொடுத்து விட்டார். அவன் பிரமித்துப் போனான்.

நெடுநாட்களாகத் தாம் பட்ட கடனைத் தீர்த்துவிடலாம் என்ற ஆர்வம் அவருக்கு. இந்த நவராத்திரி வருவதற்குள் மிகவும் அழகாக, பூஜைக்கு உரியதாக ஶ்ரீ ராஜ ராஜேசுவரியின் திருவுருவத்தைச் செய்துவிட வேண்டும் என்ற ஆசை. அவர் தம் அகக் கண்ணில் அம்பிகையை உருவாக்கிவிட்டார். முன்பே சாஸ்திரியாரிடம் அம்பிகை யின் திருக்கோலத்தைப்பற்றித் தெளிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார் அல்லவா?

"உன்னுடைய மற்ற வேலைகளையெல்லாம் கெடுத்துக் கொண்டு இதை ஏன் செய்கிறாய்? ஒழிந்தபோது செய்து தரலாமே!” என்று சாஸ்திரியார் சொன்ன போது விசுவநாதர் கேட்கவில்லை.

"முன்பே செய்து தந்திருக்க வேண்டியது. இவ்வளவு நாள் நல்ல கட்டையாகக் கிடைக்கவில்லை. இப்போது தான் கிடைத்தது. இந்தச் சமயத்தை விடலாமா? எப்படியும் இந்த நவராத்திரிக்கு அம்பாள் உங்கள் கையில் பூஜையை ஏற்றுக்கொள்ள எழுந்தருளுவாள்' என்று சொன்னார். -

சாஸ்திரியார், "எல்லாம் அம்பிகையின் கிருபை" என்று பேசாமல் இருந்துவிட்டார்.

புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது. விசுவநாதர் ஒருவாறு உருவத்துக்கு எல்லை கோலி வேலை செய்துவந்தார்.