பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

குமரியின் மூக்குத்தி

உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் போதாதே!”

“சரி, சரி, போதும், போதும் உன் பேச்சு. நான் ஊருக்குப் போய்விட்டு வருகிறேன்.”

அவர் ஊருக்குப் போயிருந்தபோதுதான் விசுவநாதருக்கு அந்தச் சோதனை நேர்ந்தது. யாரோ ஒரு நண்பர் அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் தம்முடன் ஒரு செல்வரையும் அழைத்து வந்தார். அவர் வீட்டில் அம்பிகை பூஜை செய்கிறவராம். அப்போது ராஜராஜேசுவரி முழுப் பொலிவோடு உருவாகி விட்டாள். அந்தத் தெய்வ உருவைத் தம் நண்பருக்கும் அவருடன் வந்த செல்வருக்கும் காட்டினர் மரச் சிற்பி. அதைக் கண்டவுடன் செல்வர் வியப்பே வடிவமானார். அதைப் பார்க்கப் பார்க்கத் தம் கண்ணை வாங்க முடியவில்லை. "இது என்ன விலையாகும்?" என்று கேட்டார். - .

"விற்பதற்குச் செய்தது அல்ல இது" என்றார் ஆசாரியார்.

"ஏன் விற்கக்கூடாது?" என்று செல்வர் கேட்டார்.

ஆசாரியாருக்கு என்னவோ தோன்றிற்று; இதற்குப் பணம் கொடுக்கிறவர் யாரும் இல்லை” என்று கூறினார்.

"என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி என்ன விலை ஆகப்போகிறது? எவ்வளவு விலை ஆனாலும் நான் கொடுத்துவிடுகிறேன்.”

ஆசாரியார் உடனே, "ஆயிர ரூபாய்” என்றார். அந்தத் தொகையை அவர் கொடுப்பதாவது என்று எண்ணினார். ஆனால் செல்வரோ சளைக்கவில்லை. 'இவ்வளவுதானா? இந்தாருங்கள், இருநூறு ரூபாய் முன்பணம். பாக்கியை ஊருக்குப் போய் அனுப்பி இந்த மூர்த்தியை வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி இரண்டு நோட்டை நீட்டினார்.