பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

குமரியின் மூக்குத்தி

விட்டார். இரவும் பகலும் செய்தார். ஒன்று போலவே ஒன்று செய்வது எளிதென்று நினைத்தார். ஆனால் அது எவ்வளவு கடினமானது என்று அந்தக் கலைஞருக்கு இப்போது தெரிந்தது. அது உயிர் இல்லாத யந்திரத்தின் வேலையல்லவா? -

நடுநடுவே தர முடியாது என்று செல்வருக்குச் சொல்லி அனுப்பிவிடலாமா என்று தோன்றியது. ஆயிர ரூபாய் நினைவு அதை மாற்றியது. "நான் அதை விற்று விட்டேன். அடுத்த நவராத்திரிக்கு வேறு செய்து தருகிறேன்” என்று தம் நண்பரிடம் சொல்லலாமே என்று நினைத்தார். அப்படிச் செய்வதனால் சாஸ்திரியார் சிறிதும் வருத்தப்பட மாட்டார். நல்ல விலைக்கு விற்றதுபற்றி மகிழ்ச்சியே அடைவார். ஆனால்-அந்த மகோபகாரியை ஏமாற்றலாமா? அது தருமமாகுமா? அவரைவிட ஆயிர ரூபாய் பெரிதா? அவருடைய சகாயம் இல்லாவிட்டால் இந்தப் பொருள் ஏது? புகழ் ஏது?-அலைமோதும் உள்ளத் தோடு அவர் வேலை செய்து வந்தார். கடுமையான வேலை. அதைவிட அவர் உள்ளத்தில் உண்டான போராட்டம் பின்னும் கடுமையாக இருந்தது. எப்படியாவது மற்றொரு திருவுருவத்தைச் செய்து இந்தத் தர்மசங்கடத்தினின்றும் விடுதலை பெற வேண்டும் என்று தீவிரமாக உழைத்து வந்தார்.

2

வர் கை வலித்தது. கண் வலித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நெஞ்சு வலித்தது. மார்பு அன்று; அவர் உள்ளந்தான் வலித்தது. பணப்பேயின் 'வலைப்பட்ட பாவி' என்று தம்மையே திட்டிக்கொண்டார். இரண்டு நாட்கள் ஆயின. இன்னும் இருபத்துநான்கு மணி நேரத்தில் இரண்டாவது ராஜராஜேசுவரி உருவாக வேண்டும். வெறி பிடித்தவரைப் போல வேலை செய்தார்.