பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குளிர்ச்சி

1

"ஏ அழகு, இத்தனை நேரம் என்ன செய்தாய் இராத்திரிச் சோறு சமைக்க நேரம் ஆகவில்லையா?” என்றான் மாணிக்கம்.

அழகு, சிரித்தபடியே உள்ளே விரைந்தாள்.

"என்ன சிரிக்கிறாய்? ஏழாய் விட்டது. இதுவரையிலுமா வேலை இருந்தது:”

"இல்லை, அப்பா, எனக்குக் கூலி கொடுக்கும் மேஸ்திரி, தனியே பேசவேண்டும் என்றார், நான் செய்த வேலைக்காக இஞ்சினீயர் ஐயர் இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துத் தரச் சொன்னாராம்."

"உனக்கு மட்டுமா? வேறு பெண்களுக்கும் உண்டா?'

"மற்றவர்களுக்கு இல்லையாம். நான்தான் ஒர் ஆண் பிள்ளை அளவு வேலை செய்கிறேனாம்.”

"ஆமாம், ஆண் பிள்ளேயாகத்தான் பிறந்திருக்க வேண்டும். தப்பிப் பெண் பிள்ளையாகப் பிறந்துவிட்டாய். பெண்ணாகப் பிறந்ததனால்தான் உன்னுடைய அம்மா போனாலும் எனக்குச் சோற்றுக் கவலை இல்லாமல் செய்கிறாய். பகலிலும் உழைக்கிறாய். இரவிலும் இங்கே வேலை செய்கிறாய்!'

"ஆண்டவன் எப்படி நினைக்கிறானே, அப்படித்தானே அப்பா எல்லாம் நடக்கும்?' -

மாணிக்கம் எங்கேயோ பராக்குப் பார்க்க ஆரம்பித்தான். அவன் வாழும் சின்னஞ்சிறு குடிசையைச் சுற்றித் தென்னமரங்கள். அவற்றின்மேல் பார்வையைச் செலுத்திக்கொண்டு நின்றான். இருட்டில் என்ன தெரியும்?