பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

குமரியின் மூக்குத்தி

அவன் பார்த்தது என்னவோ வெளியில்தான். உண்மையில் அவன் பார்வை காலத்தைக் கடந்து பார்த்தது. வருங்காலத்தைப் பார்த்தது. தன் எதிர் காலத்தையும், அழகுவின் எதிர்காலத்தையும் ஒருங்கே பார்த்தது.

அவனுடைய மனைவி இந்தப் பெண்ணையும் இரண்டு இளைய ஆண் குழந்தைகளையும் விட்டுவிட்டு வந்த வழிக்குப் போய்விட்டாள். குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு மாணிக்கத்துக்கு வந்தது. அவன் தந்தைக்குத் தந்தையாய், தாய்க்குத் தாயாகக் காப்பாற்றினன். அப்போது அழகுவுக்குப் பத்துப் பிராயம்; அவள் தம்பிகளுக்கு ஐந்தும் மூன்றும்.

அந்த வயசிலேயே அவள் சுறுசுறுப்பாக இருந்தாள். தம்பிகளுக்கு நீராட்டிச் சோறு போட்டுப் படுக்கவைப்பாள். தன் தகப்பன் சமையல் செய்யும்பொழுது கூட இருந்து உதவி புரிவாள். பகல் வேளையில் சிற்றாளாகக் கட்டிடம் கட்டும் இடங்களில் வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பாள்.

பேர் அழகு; ஆனால் அதற்கும் அவள் தோற்றத்துக்கும் தொடர்பேயில்லை. காக்கை போன்ற கறுப்பு. உடம்பு ஆணின் முறுக்கேறியது. முகத்தில் ஒரு முரட்டுத் தோற்றம். வேலையிலும் அப்படித்தான். குரலிலும் குழைவு இராது.

வேலை செய்யும் இடங்களில் அவளுக்கு என்ன பெயர் தெரியுமோ? காக்காய்! அவளுடைய தம்பிகளுக்கு அவள் அக்கா. மாணிக்கத்துக்கு அவள் அழகு. மற்ற எல்லோருக்குமே அவள் காக்காய்தான். பத்து வயசுப் பெண்ணாக இருந்தபோது அந்தப் பேரைக் கேட்டுப் பொறுத்துக் கொண்டிருந்தாள் என்று சொல்லலாமா? பின்பும் அவள் அந்தப் பெயரைக் கேட்டு, 'ஏன்' என்று குரல் கொடுத்தாள். அவர்கள் அழைப்பதற்கு ஏதேனும் பொருள் இருப்பதாகவே எண்ணவில்லை.