பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குளிர்ச்சி

89

கொத்தனர் யாவரும் அவளைப் பரிகாசம் செய்வார்கள். "நீ ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும்; ஒரு நிமிஷம் முநதியே பிறந்து விட்டாய்" என்று சொல்வார்கள். "அப்படிப் பிறந்திருந்தால் நானும் இரண்டு ரூபாய் கூலி வாங்குவேன்" என்று உடனே அவள் விடை கூறுவாள்.

"உன் குரலால் காக்காய் என்று பெயர் வந்ததா? உன் அழகால் வந்ததா?” என்று கேட்பார்கள்.

"இரண்டாலுந்தான்" என்று சொல்லி அவர்கள் மேலே பேச வகையில்லாமல் செய்துவிடுவாள்.

அவளுக்கு வயசு ஆகி வந்தது. மங்கைப் பருவம் அடைந்தாள். ஆனால் என்ன ? பழைய காக்காய்தான். பழைய சிற்றாள்தான்.

அவள் வேலையில் மட்டும் எந்திரந்தான். மூன்றாள் வேலையை அவள் செய்துவிடுவாள். நாணமோ, கோழைத் தனமோ அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. யார் என்ன சொன்னலும் பளிச்சுப் பளிச்சென்று விடை கூறி விடுவாள். அதனால் வாய்த் துடுக்குக்காரி என்று அவளிடம் அதிகமாகப் பேச்சுக் கொடுப்பதை நிறுத்தலானார்கள்.

அவளுடைய அப்பனுக்கு அவள் வாய்த்துடுக்குப் பொறுப்பதில்லை. "இந்த வாயைக் கொண்டு நீ எப்படிப் பிழைக்கப் போகிறாய்?" என்று அவன் கூறி வருத்தப்படுவான். "நான் பிழைக்காமல் செத்துப் போய்விட மாட்டேன், அப்பா. வாய் இல்லாவிட்டால் உலகம் நம்மை மண்ணுண்ணிப் பூச்சியாக எண்ணி ஏறி மிதித்துவிடும்" என்பாள். "நீ காளி அவதாரம்; உன்னோடு பேச்சுக் கொடுக்கக்கூடாது" என்று சொல்லி மாணிக்கம் பேச்சை நிறுத்திவிடுவான்.

'இவள் குடியும் குடித்தனமுமாக இருந்து அடங்கி ஒடுங்கி வாழ வேண்டுமே! வாய்த்துடுக்கும் முரட்டுத் தனமும் இருந்தால் நாலு நாளைக்குப் பெயர் சொல்ல முடியாதே!"