பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது90

குமரியின் மூக்குத்தி

இதுதான் மாணிக்கத்தின் கவலை. இருளிடையே தென்ன மரத்தின்மேல் விழுந்த பார்வை இருட்டைத் தான் பார்த்தது. பகலிலும் அவன் சிந்தனையில் ஆழ்ந்து பார்க்கும்போது இருட்டைத்தான் பார்த்தான். ஒளியின் ஒரு சிறு கீறல்கூட அவனுக்குப் புலனாவில்லை.

அவள் பெண்ணாகப் பிறக்காமல் இருந்தால்-அது இனி நடக்கிற செயல் அன்று; கடந்து போனதை மாற்ற நாம் யார்?

2

அன்று கூலிவேலை செய்யும் பெண்களும், ஆண்களும் கொத்து வேலைக்காரர்களும் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். "அந்தப் பெண், எவ்வளவு அடக்க ஒடுக்கமாக இருந்தாள்! மான்குட்டி போல அல்லவா நடந்தாள்?' என்றான் ஒருவன். "அந்த மானை வேடன் வலை போட்டுப் பிடித்துக்கொண்டு போய்விட்டான்" என்று சொல்லிச் சிரித்தான் மற்றொருவன். "பூ அழகாக இருந்தால் பறிக்கக் கை நீளுவது இயற்கைதான்' என்றார் ஒரு கொத்தனர். அப்போது அவர் தம்மிடம் செங்கல்லை நீட்டிக்கொண்டிருந்த பெண்ணைக் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்தார்.

"தூ!" என்று காறி உமிழ்ந்தான் பெரியசாமி. அவனும் அங்கே கொத்துவேலை செய்துகொண்டிருந்தான்.

"இருந்தாலும் அந்தப் பயல் பொல்லாதவன். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு போய்விட்டானே! என்றான் மற்றொரு கொத்தன்.

"பின்னே நீயும் வா என்று உன்னையும் கூட்டிக் கொண்டுப் போகச் சொல்கிறாயோ?” என்றான் வேறு ஒருவன்.

“என்ன மோசமான பேச்சு?" என்று மறுபடியும் காறித் துப்பினான் பெரியசாமி.