பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அடி கோலிய இராபர்ட் கிளைவ் அந்தத் திருப்பணியை வெற்றிகரமாக முடிப்பதற்கு மேற்கொண்ட முதல் நடவடிக்கை ஆர்க்காட்டுப் போர்தான். ஆம், ஆர்க்காட்டுப் போரில் அன்று இராபர்ட் கிளைவ் அடைந்த வெற்றியே, ஆங்கிலப் பேரரசு கருநாடகத்தில் அமைய நிகழ்த்தப் பெற்ற கால்கோள் விழா. ஆர்க்காட்டு வெற்றிக்குப் பின், திருச்சியைக் காக்கக் கிளைவ் விரைந்தார். அவரை நிழல் போல் தொடர்ந்தான் கான் சாகிப். திருச்சிப் போரில் கிளைவுக்குத் துணை புரிய வந்த வெள்ளைத் தளபதியின் பெயர் லாரென்ஸ். லாரென்ஸும், கிளைவும் திருச்சியைக் கைப்பற்ற, சந்தா சாகிபின் பொருட்டு முற்றுகையிட்டிருந்த பிரஞ்சுப் படைகளை எதிர்த்து மேற்கொண்ட நடவடிக்கை ஒவ்வொன்றிலும், கான் சாகிப் தன் கைவரிசைகளைக் காட்டினான். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்குச் சரியான கையாள் கிடைத்தான் என்று வெள்ளை வர்க்கம் கொள்ளை மகிழ்ச்சி கொண்டது. கிளைவின் நெருங்கிய நண்பனான ஜான் டால்டன், கான் சாகிப்பைப் புகழ்ந்து, புகழ்ந்து மேலிடத்துக்குப் பற்பல கடிதங்கள் எழுதினான்.

1752-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி சந்தா சாகிபு தஞ்சை மன்னன் கையில் சிக்கி, அவனாலேயே கொலை செய்யப்பட்டான். ஆங்கிலக் கும்பினி கொடி போட்டு, நாட்டு மக்களைக் கொள்ளையடித்தது. அக்கும்பினியால் அரச பதவி பெற்ற நெஞ்சுரமும் நேர்மைத் திறமும் இல்லா ஆர்க்காட்டு நவாபு, கும்பினி உருட்டியபடி உருண்டார். இச்சமயத்தில் பிரஞ்சுக் கும்பினி ஆங்கிலக் கும்பினியை