பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கல் நாட்டியவனும், அவனுக்குக் கல்லும் கரண்டியும் கொத்தனைப் போல் எடுத்துக் கொடுத்த கான் சாகிபும் ஒரே மாதிரி செத்தார்களே என்று ஏங்குகிறது ஆங்கில எழுத்தாளனின் இருதயம்!

ஒருவாறாக, 1755-ஆம் ஆண்டு ஜனவரியோடு பிரஞ்சுப் போர் முடிந்து, ஒப்பந்தம் ஏற்பட்டது. கருநாடகத்தில் ஆங்கிலேயர் கையே உயர்ந்தது. அப்பொழுது, மேஜர் லாரென்ஸ் சென்னையில் இருந்த கும்பெனியின் ஆட்சிக் குழுவுக்கு ஒரு கடிதம் வரைந்தான். அதன் வாசகம் வருமாறு:- “கனவான்களே, உங்கள் கவனத்துக்கு இன்னொருவரையும் கொண்டு வர அனுமதி வேண்டுகிறேன். அவர் பெயர் முகம்மது யூசுப். அவர் நம் சிப்பாய்களின் தலைவர். அவருடைய கூர்த்த அறிவையும், திறமையையும் மட்டுமன்றி — ஊழியம் செய்வதில் அவருக்குள்ள ஊக்கத்தையும், விழிப்பையும் எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். எதையும் நான் சொல்லுவதற்கு முன் அவரே முன் வந்து, செய்ய வேண்டியதைச் செம்மையாகவும், விரைவாகவும் செய்து முடிக்கிறார். பயனுடைய அவ்வீரருக்குத் தாங்கள் ஒரு பாராட்டுக் கடிதமும், ஒரு சிறு பரிசும் அனுப்பினால், அவர் திறமைக்கு வெகுமதி அளிப்பது மட்டுமல்லாமல், அவருக்குப் பேரூக்கத்தையும் அது தரும்.”

லாரன்சின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உடனே தீர்மானமும் செய்தது கிழக்கிந்தியக் கும்பினி. அச்செய்தியை லாரன்சுக்கும் தெரிவித்தது.