பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

1755-இல் நிகழ்ந்த கர்னல் ஹீரான் படையெடுப்பில் தன் பங்கைத் தயக்கமின்றிச் செய்த கான் சாகிபு, கும்பினிக்கு மேலும் தன் ஆற்றலைக் காட்டி, அரும்புகழ் எய்துவதிலேயே, கண்ணுங்கருத்துமாய் இருந்தான். அந்நிலையில், தமிழகத்தின் வடக்கே, வேலூரில் இருந்த மூர்த்தாஸ் அலி என்பவன், ஆர்க்காட்டு நவாபுக்குப் போட்டி நவாபாக உருவாகி வந்தான். அவனை அடக்க ஆர்க்காட்டு நவாபின் வேண்டுதலின் பேரில், கும்பினி அரசாங்கம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் தோல்வியையே கண்டன. ஆனால், அந்த நடவடிக்கைகளில் பெரும் பங்கு கொண்ட கான் சாகிபின் வீரத்தை நேரில் கண்டவர் இராபாட் ஓர்ம். ஒரு சமயம் கான் சாகிபு, தன்னிடம் கும்பினிக்கு லட்சக் கணக்கில் கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டு, பின் ஏமாற்றப் பார்த்ததோடு, தன்னைப் பொய்யனாகவும் ஆக்க முனைந்த முசரத் அலியைக் கூர்வாளால் குத்தப் பாய்ந்தான். அவனை அப்பொழுது இராபர்ட் ஓர்மே தடுத்து நிறுத்தினார். இப்படி வெள்ளை வீணருக்காக வாளுருவியமையாலே, கான் சாகிபை இராபர்ட் ஓர்ம், ‘இந்திய முஸ்லிம்களுள் மிகப் பெரிய வீரன் யூசுப் கான்’ என்று புகழ்ந்துள்ளார். தமிழகத்தின் வடவெல்லையின் நிலைமை இதுவாக, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பூலித் தேவர் இட்டது சட்டமாய் இருந்தது. மாபூஸ் கானைப் பூலித் தேவரும், அவர் தலைமையில் உரிமைக் கொடி உயர்த்திய தென்பாண்டி நாட்டு மேற்றிசைப்