பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

சுதந்திர உணர்வு படைத்த பாளையக்காரர்கள் தந்த தொல்லை ஒரு புறம் இருக்க, கான் சாகிபுக்கு அவன் நண்பர்களாலேயே பெரிய தலைவலி ஏற்பட்டது. கான் சாகிபு நாளுக்கு நாள் கும்பினியார் கண்களில் முக்கியத்துவம் பெறுவதை உணர்ந்து ஆர்க்காட்டு நவாபு முணுமுணுத்தான். கடனாளித் தம்பி ‘ஆர்க்காட்டு நவாபு’ என்றாலும், அரைக் காசுக்குப் பயனில்லை என்று அறிந்து, மாபூஸ்கான் அவனுக்குத் ‘துரோகி’யாகி விட்டான்; மணிக்கு மணி தங்கள் பலத்தைப் பூலித் தேவர் தலைமையில் பெருக்கி வந்த பாளையக்காரர்கள் பக்கம் சாய்ந்தான். இன்னும் இது போல் நாட்டில் அப்போது இருந்த குட்டிப் பிசாசுகள் பல ஆடுவதும், அடங்குவதுமாய் இருந்தன. இந்நிலையில் கான் சாகிபு மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், எடுத்த காரியத்தைக் கும்பினியார் எண்ணி எண்ணி மகிழ, ஆவன புரிந்து வந்தான். முக்கியமாக, மதுரை மாநகர் பகைவர் கையில் சிக்கி விடாமல் இருக்கக் கும்பினியின் சார்பில் அவன் செய்த முயற்சிகள் கொஞ்சம் அல்ல. ஆனால், இவ்வளவு செய்தும், தென் பாண்டிப் பாளையப்பட்டுகளின் நிலைமை ஆர்க்காட்டு நவாபும், கும்பினி அரசாங்கமும் விரும்பியது போலக் கட்டுக்குள் அடங்குவதாய் இல்லை. 1755 அக்டோபர் 8ஆம் தேதி தளபதி காலியாட்டின் அழைப்பின் பேரில் திருச்சி சேர்ந்தான் கான் சாகிபு. அவன் மதுரையை விட்டு அகன்ற உடனே, நாட்டின் நிலைமைகள் வியக்கத்தக்க அளவிற் சடுதியில் மாறின. பாளையங்கோட்டை தவிரத் தென்பாண்டி நாட்டின்