உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வெற்றிலையையும், புகையிலையையும் குதப்பிக் கொண்டே எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும், எமனையும் எதிர்த்துப் போரிடுவார்கள் என்ற செய்தியை அறிந்திருந்த ஆங்கிலக் கொடுங்கோலர்கள், கோட்டைக்குள்ளே வெற்றிலையும், புகையிலையுங்கூட நுழையாத படி காவல் காத்தார்களாம். அது மட்டும் அன்று; மதுரைக்கருகே எங்கிருந்து வெற்றிலையும், புகையிலையும் கொண்டு வரப்படுகின்றன என்று ஆராய்ந்து அறிந்து, வெற்றிலைக் கொடிக்காலையும், புகையிலைக் காட்டையும் தீ வைத்து அழித்தார்களாம்.

எந்தக் கொடுமையும் கான் சாகிபின் உள்ளத்தைக் கலக்கவில்லை. ஆயினும், வயிற்றுக்கு ஆகாரம் இன்றி, வாடி வதங்கிய வீரர் கூட்டத்தில், பலர் எதிரிகளின் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியையும், அவர்களுக்குப் பிரெஞ்சுத் தளபதிகளே வழி காட்டுகிறார்கள் என்ற உண்மையையும் அறிந்த அவன் உள்ளம், கொல்லன் உலைக் களம் போல் கொதித்தது. அதனால், எந்தப் பிரெஞ்சுத் தளபதி மார்ச்சந்தை நம்பிப் போர் தொடுத்தானோ, அதே மார்ச்சந்தைக் கோபத்தால் கடிந்தான்; கைத்தடியால் அடித்தான். அவமானம் அடைந்த மார்ச்சந், ‘இனிப் பொறுப்பதில்லை’ என்று தன் பிறவிப் புத்தியைத் திட்டமிட்டுக் காட்டத் தீர்மானித்தான். கான் சாகிபின் தலைமை அமைச்சனாக இருந்த சீநிவாசராவ் என்பவனையும், பாபா சாகிபு என்பவனையும் கைக்குள் போட்டுக் கொண்டு சதித் திட்டங்களை உருவாக்கினான்.