பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

19

அந்த இடத்தில் நடப்பதைக் கண்ணால் பார்க்கலாம். இந்த மூலிகைகள் சஞ்சீவி மலையில் உள்ளன என்று குப்பன் கூறியிருந்தான். அவற்றைப் பறித்துத் தரும்படி வஞ்சி கூறவே, குப்பன் அவளை மலைக்கு அழைத்துச் செல்கிறான்.

மலையின் உச்சியில் மூலிகைச் செடியைக் காட்டி இவை தான் கிள்ளிக் கொள் என்கின்றான். மூலிகைகளைப் பறித்துக் கொண்டு இருவரும் கீழிறங்கி வந்து ஒரு மர நிழலில அமர்கின்றார்கள்.

எந்த மூலிகையைத் தின்றால், உலகத்துப் பேச்சுக்கள் கேட்குமோ அதை முதலில் தின்றார்கள். உலகத்து மாந்தர் அவரவர் மொழியில் பேசுவது இவர்களுக்குச் செந்தமிழில் மொழி பெயர்த்துக் (!) காதில் விழுகிறது.

முதலில் எங்கோ ஓர் உணவு விடுதியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவன் ஒருவன், இத்தாலி நாட்டான் ஒருவனிடம் - பேசிக் கொண்டிருப்பது காதில் விழுகிறது. இத்தாலிக்காரனின் நிற்பேத வாதத்தைப் பிரெஞ்சுக்காரன் கண்டிக்கிறான். அடுத்து அமெரிக்க நாட்டின் குரல் ஒலிக்கிறது. உலக சகோதரதத்துவக் கொள்கையை அமெரிக்கன் ஒலிக்கின்றான்.

மூன்றாவதாக இங்கிலாந்து நாட்டானின் பேச்சுக் கேட்கிறது. இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஆங்கில நாட்டான், இந்திய மக்களின் குறைபாடுகளை எடுத்துக்கூறி அவர்கள் என்றென்றும் அடிமையாய் இருக்கவே தகுதியுள்ளவர்கள் என்று விளக்கமாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறான்.

கடைசியாக அவர்கள் காதில் தமிழ் நாட்டுப் பேச்சு விழத் தொடங்குகிறது.