பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

27

மனமெங்கும் நிறைந்திருப்பதைப் பாவலர். கோடி பல கோடியாய், ஒன்றே யதுவாய் உலகமெலாம் தோற்றமுற்றதாகக் கூறுகிறார்.

நான்காம் நாள்தான் குயில் பாவலரை வரச் சொல்லியிருக்கிறது. ஆனால், ஒருநாள் போவதே பெரும்பாடாய் விட்டது கவிஞருக்கு.

நாளொன்று போவதற்கு
        நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ தறிபடுமோ

        யாரறிவார்

என்று தான்பட்ட பாட்டை விளக்குகிறார்.

தாளம் எழுப்பும் ஒலி கேட்போர் காதுக்கு இன்பம் தருகிறது. பாடும் பாட்டுக்கு அது இனிமை சேர்க்கிறது. ஆனால் கையில் இருக்கும் தாளம் அடிபடுவதை உற்று நோக்கினால் அதன் துடிப்பு விளங்கும். அடிபடுவதும், அதிர்வதும், அடிதாங்காமல் விலகிச் செல்வதும், மீண்டும் அடிபடுவதும், பாட்டு முடியும் வரை அது படும்பாடு உற்றுநோக்கினால் மிகுந்த உயிர் வாதையாகத் தோன்றும்.

தறியில் ஊடு பாவு இடமும் வலமும் ஒடி ஒடி இடையறாது சென்று சென்று வரும் காட்சி துன்பத்தால் நெஞ்சு துடிக்கும் துடிப்புக்கு ஒரு சாட்சி.

தாளம் படுமோ தறிபடுமோ என்று மனத்துடிப்பை விளக்கவரும் பாவலரின் கற்பனை நயம் மிகச்சிறந்தது.

மனத் துடிப்புத் தாங்காமல் பொழுது விடிந்தவுடன் சோலையை நோக்கிக் கால்கள் நடைபோடுகின்றன.