பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

33

பொதுவாகவே, காதல் என்று வந்துவிட்டால் பெண்கள் அரியணையில் ஏறிக் கொள்வதும், ஆண்கள் இட்ட வேலையைச் செய்யும் அடியவர்கள் ஆவதும் உலகியற்கை போலும்.

சஞ்சீவி மலைச் சாரலில் வஞ்சியைக் காதலிக்கும் குப்பனும் அப்படித்தான் இருக்கிறான்.

எப்படியாவது அவள் தன் மேல் தயவு காட்டினால் போதும் என்ற நிலையில் குப்பன் இயங்குகின்றான்.

மலைச் சாரலில் ஆவலோடு காத்திருக்கின்றான். வஞ்சி எப்போது வருவாள்; இன்பம் தருவாள் என்று அவன் நெஞ்சு ஏங்குகின்றது.

சற்றே தாழ்த்து வருகிறாள். அந்தச் சற்று நேரம்கூட அவனால் பொறுக்க முடியவில்லை.

இப்படி உயிரையே வைத்திருக்கும் அவனை அவள் வந்தவுடன் “தொடாதீர்கள்” என்று தடைபோடுகிறாள்.

அதிர்ந்து போகிறான் குப்பன். கெஞ்சுகிறான். பசியோடு இருக்கிறேன். கட்டுச் சோறுபோல நீ அருகில் கிடைத்தாய்! ஆனால் அந்தக் கட்டுச் சோற்றை யுண்ணக் கூடாதென்று தட்டி விடுகிறாயே! நீதியா நியாயமா? என்று ஏங்குகின்றான்.

ஆவல் என்னும் வெயில் பொறுக்க முடியாமல் இருந்தேன். ஆலமரத்து நிழல் போல உன்னைக் கண்டேன். நிழலுக்கு வராதே என்று நிறுத்திவிட்டாயே! நெறிதானா என்று அறங்கேட்கின்றான்.

நேற்று அன்பாகத்தானே இருந்தாய்? இன்றென்ன சினம்? என்று காரணம் புரியாமல் தவிக்கிறான்.