பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

45

சின்னக் குயிலி. வேடர் குலத்தில் உனக்கொரு மாமன் மகன் இருந்தான். அவன் உன்பால் மையல் கொண்டிருந்தான். அவன் மையலுக்கு இரங்கி நீ அவனை மணந்து கொள்ள ஒப்பினாய். ஆனால் உனக்கு அவன்மேல் காதல் கிடையாது.

உன் அழகைக் கேள்விப்பட்டு தேன்மலை வேடர் தலைவன் மொட்டைப் புலியன், தன்மகன் நெட்டைக்குரங்கனுக்கு உன்னைப் பெண் கேட்டான். உன் தந்தை அதற்கு ஒப்புக் கொண்டுவிட்டான்.

இதைக் கேள்விப்பட்ட மாடன் உன்னிடம் வந்து கோபித்துக் கொண்டான். கோபம் கொள்ளாதே மாடா, அப்பா பேச்சை நான் தட்ட முடியாது. நெட்டைக் குரங்கனுக்கு மனைவியாய்ப் போனாலும் மூன்று மாதத்தில் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன். பிறகு உன்னை மணந்து கொள்கிறேன் என்று சொன்னாய். அப்போதும் உன் மாமன் மகன்மேல் காதல் கொண்டு நீ இப்படிச் சொல்லவில்லை. அவன்மேல் உள்ள இரக்கத்தால் தான் இப்படிக் கூறினாய்

ஒரு நாள் காட்டில் நீ தோழியருடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, சேர இளவரசன் வேட்டைக்கு வந்தான். சேர இளவரசனும் நீயும் உண்மையாக ஒருவரையொருவர் காதலித்தீர்கள். ஆவி கலந்து விட்டீர்கள். இருந்தாலும் நீ ஏற்றத்தாழ்வை எடுத்துரைத்து மறுத்தாய். சேர மகன் உன்னையே திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினான். அதன் பிறகு நீ நாணந்தவிர்ந்து அவனைக் கூடி நின்றாய். இருவரும் ஆரத்தழுவி இதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையில் நெட்டைக் குரங்கன் பார்த்து விட்டான். அவனைத் தேடிக் கொண்டுவந்த மாமன்மகன் மாடனும் பார்த்துவிட்டான்.