பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

47

மோக வெறி மூளப் பாவலர் அந்தக் குயிலை முத்தமிடுகிறார். அது தெய்வ அழகுமிக்க பெண்ணாக மாறிவிடுகிறது.

கவிதைக் கனிபிழிந்து
பண் கூத் தெனும் இவற்றின்
சாரமெலாம் ஏற்றி
அதனோடே
இன்னமுதைத் தான் கலந்து
காதல் வெயிலிலே
காயவைத்த கட்டியினால்

மாதவளின் மேனி வகுத்தான் பிரமன்

என்று களிகொண்டு அவளைக் கண்டு தழுவி முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் சித்த மயங்கிச் சில போதிருக்கையிலே பாவை, சோலையெல்லாம் மறைந்து விடுகிறது. கனவு கலைந்து, தன் அறையில் புத்தகங்களுக்கு மத்தியில் இருப்பதை யுணர்கிறார் பாவலர்.

சோலை குயில் காதல் சொன்னகதை யத்தனையும்
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றிய தோர் கற்பனையின்

சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்.

இவ்வாறு கதையை முடித்த பாரதியார் அதை வெறுங் கற்பனையாக விட்டுவிட விரும்பாமல்,

ஆன்ற தமிழ்ப் புலவீர் கற்பனையே யானாலும்
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க யாதானும்

சற்றே இடமிருந்தாற் கூறிரோ?

என்று தம் கற்பனைக் கதை ஒரு வேதாந்த தத்துவத்தை உட்பொருளாகக் கொண்டு பிறந்தது என்று கூறாமற் கூறி முடிக்கிறார்.