பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

குயிலும்...சாரலும்

குயில் தன் முன்பிறப்பு அறிதல், இங்கே மெய்யுணர்தல் என்ற தலைப்பில் கூறப்பட்டது.

இந்த முன்பிறப்புக் கதை குயில் தான் நடத்திய மூன்று காதல் நாடகங்களுக்குச் சமாதானமாகச் சொன்னது என்று கூறலாம்.

தன்னை நாடிவந்த பாவலனிடம் காதல்மொழி பேசிய குயில், குரங்கிடமும், மாட்டிடமும் தான் காதல் கொண்டிருப்பதாகவே பாடுகிறது.

தன் மாயப்பாட்டாலும், பேச்சாலும் அவற்றின் காதல் உணர்வுகளைத் துாண்டி விட்டுத் தன்னைக் காதலிக்கும்படி செய்கிறது. தன் அற்புதமான பாட்டுத் திறத்தால், அது தன்னைக் கேட்பாரை மோகவெறி கொள்ளச் செய்யும் ஆற்றல் பெற்றதாக அமைகிறது.

குயிலின் பாட்டில் பாவலன் தன்வயமிழந்ததைக் கூறுவது-தன்னை மறந்து பாட்டோடு பாட்டாகத்தான் கலந்து நின்றதைக் கூறுவது- மிக அருமையாய் அமைந்துள்ளது.

பாட்டு முடியும்வரை பாரறியேன் விண்ணறியேன்
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்
தன்னை யறியேன் தனைப்போல் எருதறியேன்
பொன்னை நிகர்த்த குரல் பொங்கிவரும் இன்பமொன்றே

கண்டேன்!

கடவுள் எத்தனையோ அற்புதங்களைப் படைத்தார்; அற்புதமாக உலகத்தை நடத்திச் செல்கிறார்; அரியபெரிய செயல்களையெல்லாம் செய்கிறார். அவருடைய சாதனைகள் பெருஞ்சாதனைகள்! அவருடைய அறிவு பேரறிவு! அவர் பெரிய சமர்த்தர்! ஆனாலும் அவர் படைத்தவற்றிலே தானாமுதம் படைத்த காட்சி பெரும் விந்தையாகும்!