பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

53

பார்த்து, முடிவு செய்பவளாக விளங்குகிறாள். அவன் குப்பனுக்குத் தெளிவு மொழி கூறுகிறாள்.

ஏன் வீணாகப் பயப்படுகிறீர்கள்? இந்த உலகம் தோன்றிய நாள் தொட்டு மலையைத் தூக்கும் மனிதன் பிறந்ததில்லை. இனிப் பிறக்கவும் முடியாது. ஒரு மனிதன் எப்படி பூமிக்கும் வானத்துக்குமாக வளர முடியும்? எவனோ சொல்லுகிறான் என்றால் அதை நீங்கள் ஏன் நம்பவேண்டும்? வஞ்சி பேசிக் கொண்டிருக்கும் போதே குரல் தொடர்கிறது.

இந்நேரம் போயிருப்பார்!
இந்நேரம் பேர்த்தெடுப்பார்!
இந்நேரம் மேகத்தில்
ஏறிப் பறந்திடுவார்!
உஸ் என்று கேட்குதுபார்
ஒர்சத் தம் வானத்தில்
விஸ்வரூபம் கொண்டு

மேலேறிப் பாய்கிறார்.

குப்பன் மலை பெயர்ந்து பறப்பதாகவே எண்ணுகிறான்.

அறிவுள்ள வஞ்சி தொடர்ந்து அந்தப் பேச்சைக் கவனிக்குமாறு கூறுகிறாள். குரல் தொடர்கிறது.

இப்படியாக அனுமார் சஞ்சீவி மலையை எடுத்துச் சென்று இலங்கையில் வைத்தார். சஞ்சீவி மருந்தின் சக்தியால் ஏற்கெனவே செத்துக் கிடந்த இராமனும் இலட்சுமணனும் உயிர் பெற்று எழுந்தார்கள். மீண்டும் அனுமார் மலையைத் தூக்கிக் கொண்டு போய் இருந்த இடத்தில் வைத்துவிட்டு வந்தார். மறுபடி ஒரு நிமிடத்தில் திரும்பிவந்து செத்துப் பிழைத்த இராமன் காலில் விழுந்து வணங்கினார்.