பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

புதுக்குப்பைகளை என்ன செய்யப் போகின்றனவோ தெரியவில்லை, கூவத்தில் தான் கொட்டவேண்டும். கங்கையே கூவமாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் கூவம் கெட்டு விடும் என்று அஞ்சத் தேவையில்லை

நிற்க,

குயிலும், சஞ்சீவி மலைச் சாரலும் மிகச் சுவையான இரண்டு இலக்கியங்கள்! இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்புத் தோன்றுவதில்லை. மாறாக மீண்டும் சுவைக்கத் தோன்றும் மாயசக்தி பெற்றவையாக உள்ளன.

இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்ததன் விளைவாக இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

ஒப்பாய்வு முறையில் நான் இதைச் செய்யவில்லை; எலும்புக்கூடுகளை எண்ணிப் பார்ப்பதில் நயமும் இல்லை. பயனும் இல்லை! துப்பறிவோர் மட்டுமே செய்ய வேண்டிய வேலையில் நான் தலையிட விரும்பவில்லை.

சுவை, உணர்வு, கருத்து என்ற அடிப்படையிலேயே இந்த ஒப்பீடு அமைந்துள்ளது.

பாரதியிலிருந்து பாரதிதாசன் எவ்வாறு மேம்படுகிறார் என்று நான் பார்க்கவில்லை. எவ்வாறு வேறுபடுகிறார் என்றே நோக்குகின்றேன். அந்த வேறுபாடு மேம்பாட்டை உண்டாக்குகிறதா இல்லையா என்பதை உங்கள் ஆய்வுக்கு விடும் தூண்டுகோலாக நான் இருக்கிறேன்.

நாரா நாச்சியப்பன்