பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அருளும் அன்பும் பொருந்தியதாம்
அழகு வடிவம் தாங்கியொரு
பெரியார் வந்தார்; அவர்எதுவும்
பிச்சைக் காரர்க் கீயவிலை.

கந்தன் அவர்பின் ஒடினனே
காசு கேட்டு நின்றனனே.
அந்தப் பெரியார் வாய்திறந்தோர்
அரிய கருத்தை வழங்கினரே!

"தாழ்ந்து தாழ்ந்தே எத்தனைநாள்
தம்பி நீயும் பிழைத்திடுவாய்?
ஆழ்ந்து சிந்தித் திடுவாயேல்
அருமை யான வழிகாண்பாய்.

"தன்னை நம்பி வாழ்வோனே
தலைநி மிர்ந்து வாழ்ந்திடுவான்"
என்னும் கருத்தைச் சொல்லியவர்
ஏகி விட்டார் தம்வழியே.

பிச்சைக் கலைந்தோன் வேலையொன்று
பெறுதற் கலைந்தான் நெடுநாளே
தச்சன் ஒருவன் கடைசியிலே
தன்கை யாளாய்க் கொண்டானே.

உழைத்துப் பிழைத்தான்; பிறர்தயவை
ஒருநா ளேனும் நாடாதே!
அழைத்துப் பிறர்தாம் பாராட்டும்
அரிய நிலையை அடைந்தானே.