பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

"ஐயா உமக்கு விடுதலை நான்
        அளித்து விட்டேன் நீரினிமேல்
மெய்யாய் அடிமை அல்ல?" என
        மேலும் சொன்னார் பெருமானார்.

"விருப்ப மிருந்தால் இருந்திடலாம்
        வேண்டா மெனிலோ போய்விடலாம்"
அருட்பே ரண்ணல் அன்புமொழிக்
        கடிமை யானார் சைதவரே.

விலையைக் கொடுத்துத் தன்மகனை
        விடுவிப் பதற்கே தந்தையவர்
அலைந்து தேடிக் கடைசியிலே
        அடைந்தார் பெருமான் வீட்டினையே.

உரிய மகனோ உரிமையுடன்
        உலவக் கண்டு மனங்களித்தார்
அரிய மகனைத் தன்னுடனே
        அழைத்தார்; மகனோ மறுத்துரைத்தார்.

"விற்று வாங்க முடியாத
        விந்தை யடிமை ஆனேன்நான்
பற்றுக் கொண்டேன் பெருமானின்
        பக்க மிருந்து பணிசெயவே.

"நல்ல பெரியோர் அன்புக்கே
        நாளும் அடிமை யாவதிலே
எல்லை யில்லா மகிழ்வுண்டாம்"
        இதுவே சைதின் மொழியாகும்.