பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 குயில் கூவிக்கொண்டிருக்கும்


துணைக் கடிதத் தாள்களையும் சுக்கு நூறாகக் கிழித்து முட்டாக வைத்திருந்தார்கள். அருகில் நான் வந்ததும் 'இந்தா என்று தீப்பெட்டியை நீட்டினார்கள்.

"ஏன்?' என்றேன்.

"இவற்றைக் கொளுத்து' என்றார் பாவேந்தர்.

புரியாமல் திகைத்தேன்.

என்ன புரியலையா? நீ பிழைபட எழுதிய பாட்டுக் குத்தான் இந்தத் தண்டனை. முதலில் இவற்றைக் கொளுத்திவிட்டு அதோ (மேசையைக்காட்டி) நீ எழுதிய அஞ்சல் தாளில் உள்ள அச்சுக் கவிதையைப் படி என்றார்கள்; படித்தேன்.

தாய்மொழி தமிழ்மொழி என்போம்-செப்பும்
தமிழை சிதையாது காப்போம்.

இது தான் தாளில் உள்ள அச்சுக்கவிதை.

'பாட்டைப்பார்! சந்திப் பிழையோடு பாட்டெழுதித் தமிழைச் சிதைத்திருக்கிறாய்! செப்பும் தமிழை (ச்) சிதையாது காப்போம் என்றல்லவா எழுதவேண்டும்! ஐகாரத்துக்குப்பின் ஒற்று மிகுமே. ஒற்றுப் போடாமல் தமிழின் உயிரைக் கெடுத்திருப்பது மட்டுமல்லாமல் இதைப் பலரும் அறிய இவ்வளவு கடிதத் தாள்களிலும் ஏன் அச்சிட்டாய்? ஆகவேதான் கொளுத்தச் சொன்னேன்' என்று கூறி எழுந்து போய்விட்டார்.