பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

குருகுலப் போராட்டம்

தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று வார்தாவில் ஆணை பிறந்தால், கோவிலுக்குள்ளே ஆதிதிராவிடர்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே நுழைவார்.

வைக்கத்திலே தீண்டாமை யொழிப்புப் போராட் டம் நடக்கிறது; எங்களை உள்ளே தள்ளிவிட்டார்கள் என்று மலையாளத் தலைவர்கள் கடிதம் அனுப்பினால், காய்ச்சலையும் வயிற்று வலியையும் மறந்து பறந்து சென்று போராடி வெற்றியை நிலை நாட்டுவார். வைக்கம் வீரர் என்றும் பேரெடுப்பார்.

சாதியை யொழிக்க வேண்டும் என்று காங்கி ரசிலே தீர்மானம் போட்டால் சமபந்தி விருந்துகள் நடத்துவார்.

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்று காந்தியடிகள் சொல்லிவிட்டால், இதோ என்று முன்னோடியாக விளங்குவார் ஈரோட்டார்.

இப்படி எள் என்று சொல்லும் முன்னாலே எண்ணெயாக நின்று செயலை முடித்து விடுவார்.

காந்தியடிகளின் சீடராகவும் - மக்கள் தொண்ட ராகவும் விளங்கிய ஈரோட்டுப் பெரியார், மனங் கொதித்துப் போராடும்படியான நிகழ்ச்சி யொன்று தமிழகத்திலே நடந்தது.

அதுதான் குருகுலப் போராட்டமாக வெடித்தது!