பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலாச்சாரத்தைக் காக்க ஒரு குருகுலம்

33

நிலத்தைப் போய்ப் பார்த்தார். முப்பது ஏக்கருக்கும் ரூபாய் மூவாயிரம் விலை சொன்னார்கள்.

ஐயர் அந்த முப்பது ஏக்கர் நிலத்தை எப்படி யாவது வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்.

பத்திரிகைகளில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

செட்டிநாட்டில் உள்ள கானாடுகாத்தான் என்ற ஊரில் வயி. சு. சண்முகனார் என்ற இலட்சிய வாதி ஒருவர் இருந்தார். அவர் காந்தியடிகளிடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்.

காந்தியடிகள் தென்னாடு வந்த போது தம்முடைய இன்ப மாளிகை என்ற பெரிய பங்களாவில், காந்தியடிகளையும், அவருடன் வந்தவர்களையும் அழைத்து வந்து ஒரு வாரம் வரை தம் விருந்தினராக உபசரித்து மகிழ்ந்தவர்.

காந்தியடிகள் அவருடைய பொது நல ஈடுபாட்டைக் கண்டு, தம்முடன் சேர்ந்து தொண்டாற்றுமாறு அன்புடன் அழைத்தார்.

சண்முகனார் அடிகளின் அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாதபடி சில நீதிமன்ற வழக்குகள் தடுத்தன. காந்தியடிகள் அவற்றை யெல்லாம் உதறித் தள்ளி விட்டுத் தம்முடன் வந்து பொதுப் பணி செய்யுமாறு அழைத்தார்.

முழுநேர உழைப்பை நல்கா விட்டாலும் நாட்டு விடுதலைக்காக சண்முகனார் தம்மால் இயன்ற மட்டும் உழைத்தார்.