பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

குருகுலப் போராட்டம்

குருகுலம் தொடர்பான காரசாரமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த காந்தியடிகள் தமிழக காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடுவையும் சந்தித்துப் பேசினார்; குருகுலம் நடத்திய வ.வே.சு ஐயரையும் அழைத்துப் பேசினார்.

பிரச்சினையை அதன் தன்மையைப் புரிந்து கொண்டு - அதன் நியாயத்தைத் தெளிந்து தீர்ப்புக் கூறுவதானால் அதில் அவர் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருக்க முடியும், உறுதியான முடிவுக்கு வந்த நிலையில் அவர் தன் தீர்ப்பை ஒரு கட்டளையாக இட்டிருந்தால் கூட இருதரப்பாரும் கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகி யிருக்கும்.

ஆனால் காந்தியடிகள் பிரச்சினையை அதன் தன்மையை யொட்டி முடிவெடுக்கவில்லை. அதில் தொடர்புடையவர்கள் யார் என்ற நிலையை யொட்டி அணுகினார். அதனால் அவர் ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் ஒரு தீர்ப்பளித்து அதற்கு முடிவு காட்டத் தவறிவிட்டார்.

இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நெறி முறையின் சார்பாக நின்று கட்டளை இடுவதற்குப் பதிலாக - தீர்ப்பு வழங்குவதற்குப் பதிலாக - காந்தி யடிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அவருடைய சமாதானத்தை இரு தரப்பாருமே ஒப்புக் கொள்ளவில்லை.