பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

குருகுலப் போராட்டம்

தொன்று தொட்டுத் தங்கள் இனத்தார் அனுபவித்து வரும் சாஸ்திரபூர்வமான மேலாதிக்கத்தை இழந்து விடத் தயாராக இல்லை.

மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்கும், தங்கள் தலைமைப் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கும் அவர்கள் சமத்துவம் பேசுவார்கள்; சமரசம் பேசுவார்கள்; சாதிவேற்றுமை ஒழிய வேண்டும் என்பார்கள். அது செயற்படத் தொடங்கிவிட்டால், இது அடுக்குமா? சாத்திரத்தை மீறலாமா? சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கூப்பாடு போடத் தொடங்கி விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் வலையில் காந்தியடிகள் சிக்கிக் கொண்டார். இந்தியா முழுவதும் யாரைத் தங்கள் விடிவு காலத்தை உருவாக்கத் தோன்றிய கதிரவன் என்று எதிர்பார்த்தார்களோ, அந்தத் கதிரவன் பார்ப்பனிய மூடுபனியால் மறைக்கப்பட்ட கதிரவனாகிவிட்டார்.

அவர் பார்ப்பனர்களுக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடத் தொடங்கினார்.

சாதி யொழிப்பு என்பது காந்தியக் கொள்கைகளிலே ஒன்றாக இருந்தது. சமபந்தி விருந்து என்பது அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த உதவும் ஒரு வழியாக அமைந்தது.