பக்கம்:குறட்செல்வம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

சமுதாயத்தை, இருப்பதை விநியோகிப்பதன் மூலம் அமைக்க முடியாது. இம் முறையில் வறுமையைத்தான் பங்கிட முடியும். -

எனவே, வளத்தைப் பெருக்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். இவ்வாறு வளத்தைப் பெருக்கும் முயற்சியில் மனித குலத்திற்குத் துணை நிற்க வேண்டியது - துணை நிற்பது மழையேயாகும். மழை யின்றேல் மண்ணில் வளமில்லை. ஊற்று வளமும் குன்றும். இதன் பயனாக வறுமையே தோன்றும். பசிப்பிணியால் உந்தப் பெற்ற மக்கள் ஒழுக்கக்கேடான செயல்களிலும் ஈடுபடுவார்கள். ஆதலால், மனித குல ஒழுக்கத்திற்கு மழையே இன்றியமையாதது என்கிறார் திருவள்ளுவர்.

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு

என்பது திருக்குறள். இக் குறட்பாவை மேற்கூறியவாறு சிந்தனை செய்யாமல், 'வான் இன்றி மழையில்லை" என்று பொருள் காண்பது நிறைவாகாது.

மேலும், ஒழுக்கச் சூழல் காண, குளித்தலும் தண்ணீர் குடித்தலும் அவசியமாகும். மனித உடலின் வெப்ப நிலை அதிகமாகும் சூழ்நிலை ஒழுக்கக் கேடுகளையும் விளைவிக்கிறது. உடலின் வெப்ப நிலையை அளவோடு வைத்துக் கொள்ளத் தண்ணீரில் குளித்தலும், தண்ணீரைக் குடித்தலும் அவசியம். அதனாலன்றோ உடல்நலம் பற்றிய நூல்கள் பலகாலும் குளித்தலையும், தண்ணர் குடித்தலையும் வற்புறுத்துகின்றன. நல்ல உடல் நல்ல மனம் ஆகியவை ஒழுக்கத்தின் விளை நிலங்கள். எனவே, வான் இல் உலகிற்குத் தண்ணீர் வளம் தருவதோடு, ஒழுக்கம் சிறக்கவும் உதவுகிறது.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/16&oldid=1517349" இலிருந்து மீள்விக்கப்பட்டது