பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி ] 19

அடிக்கிறார்கள்? இப்படித் திருமணம், வளைகாப்பு, குழந்தை குடும்பம் மறுபடியும் திருமணம், வளைகாப்பு என்று ஓட ஓட விரட்டுவதுதான் வாழ்க்கையா? இந்த விதமான வாழ்க்கைக்குத் தான் நானும் பிறந்திருக்கிறேனா? என்று நினைத்த போது ஏதோ ஒருணர்வு கல்லாகக் கனத்துப் பரவி அவள் நெஞ்சை இறுக்கி நசுக்குவது போல் இருந்தது. அன்று இரவு படுக்கையில் தலையணை நனைந்து ஈரமாகும்படி நெடுநேரம் அமைதியாகக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தாள் அவள். எதற்காக அழுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

பூரணி ஒவ்வொரு நாள் மாலையும் மங்கையர் கழகத்துக்குப் போய் அதே வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தாலும் நாள் தவறாமல் அரவிந்தனைச் சந்திக்க நேரமிருக்காது அவளுக்கு. இரண்டொரு நாள் கழகத்து வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது அவனைப் பார்க்க நேரிடும். அப்படிப் பார்க்கும்போது சிறிது நேரம் பேசிவிட்டு வருவாள். சில நாட்களில் பகலில் அரவிந்தனே திருப்பரங்குன்றத்துக்கு வந்து அவள் தந்தையின் வெளிவர வேண்டிய நூல்களுக்கான கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போவான். இன்னும் சில நாட்களில் மங்களேசுவரி அம்மாளும் இளைய பெண் செல்லமும் வந்தார்கள். முருகனை தரிசனம் செய்துவிட்டு பூரணியின் வீட்டுக்கு வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள்.

புதிய வீட்டில் ஓர் அறையை முழுவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. அப்படியும் இடம் போதவில்லை. நெருக்கடியோடு சிரமப்பட்டுப் புத்தகங்களை அதற்குள் அடுக்கியிருந்தாள். புத்தகங்களைத் தவிர நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார இடமிருக்கும் அங்கே. தம்பிகளுக்குச் சாப்பாடு போட்டுப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பியபின் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு புத்தக அறைக்குள் நுழைந்து விட்டால் உலகமே மறந்து போகும் பூரணிக்கு. அப்பா சேர்த்து வைத்திருக்கும் அறிவின் உலகில் மூழ்கி விடுவாள் அவள். அப்படி மூழ்கினால்தான் தினந்தோறும் மங்கையர் கழகத்து வகுப்புகளில் தன்னிடம் படிக்கும் பெண்களுக்குப் புதுப்புதுக் கருத்துக்களைச் சொற்பொழிவு செய்ய அவளால் முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/121&oldid=555845" இலிருந்து மீள்விக்கப்பட்டது