பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 குறிஞ்சிமலர்

தொடங்கப் பெற்ற இரண்டு மூன்று நாட்களிலேயே அவளுடைய சொற்பொழிவுகளுக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. நாளுக்குநாள் கூட்டம் அதிகமாயிற்று. கேரம் விளையாடுவதும் வம்பளப்பது மாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அவள் ஒரு புதிய உலகினைக் காட்டினாள். ஒரு புதிய அறிவுச் சுவையை ஊட்டினாள். அவள் காட்டியது அறிவுலகம்! அவள் ஊட்டியது தமிழ்ச் சுவை மங்கையர் கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளங்களில் அவள் ஒவ்வொரு நாளும் மிக உயர்ந்த இடத்தை அடைந்து கொண்டிருந்தாள். முதலில் சாதாரணமாக எண்ணியவர்களும் பின்பு அவளுடைய நாவண்மையைக் கண்டு வியந்தனர்.

இந்தப் பெருமித நினைவுகளுடன் திருக்குறள் புத்தகத்தை விரித்துச் சொற்பொழிவுகளுக்குக் குறிப்பு எடுக்கலானாள் பூரணி.

சாத்தியிருந்த வாயில் கதவைத் திறந்து கொண்டு யாரோ நடந்து வருகிற ஒலி கேட்டது. வேறு யார் இந்த நேரத்தில் இங்கே வரப் போகிறார்கள்? குழந்தை தான் வருவாள் என்று நிமிர்ந்து பாராமல் எழுதிக் கொண்டிருந்த பூரணி அந்த நாகரிக மற்ற முரட்டுக் குரலைக் கேட்டுத் துணுக்குற்று நிமிர்ந்தாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கப் புது மண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் சினத்தோடு நின்று கொண்டிருந்தார். பூரணி வரவேற்றாள். 'வாருங்கள்... அப்படி அந்த நாற்காலியில் உட்காரலாமே?”

'உட்காருவதற்காக இங்கே நான் வரவில்லை. என் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டுபோகத்தான் வந்திருக்கிறேன்."

'யார் மேல் ஆத்திரம்?" 'ஒன்றும் தெரியாதது போல் பேசவேண்டாம். நான் ஒருவன் புத்தகங்களை வெளியிட்டு விற்றவை பாதியும், விற்காதவை பாதியுமாகத் திணறிக் கொண்டிருக்கும் போது நீ என்னை ஒருவார்த்தை கூடக் கேளாமல் எவனோ ஒரு மீனாட்சி அச்சகமோ, காமாட்சி அச்சகமோ வைத்திருப்பவனுக்கு வெளியிடுகிற உரிமையைத் தரலாமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/128&oldid=555852" இலிருந்து மீள்விக்கப்பட்டது