பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12

குறிஞ்சிமலர்

பூக்கின்றன. அவைகளை எங்கே பறித்து வைப்பது? யார் வைப்பது? துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது. விழுதுகளைப் போல் ஊன்றிக் கொண்டிருக்கும் பழமையான பழக்கங்கள் ஆலமரம் போன்ற தமிழ்நாட்டின் படர்ந்த வாழ்க்கையைத் தாங்கிகொண்டிருக் கின்றனவே!

கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து விளக்கைப் போட்டாள் பூரணி. ‘அப்பா இருந்தால் வீடு இப்படி ஒசையின்றி இருண்டு கிடக்குமா, இந்தக் காலை நேரத்தில்? நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும்! அப்பாவின் தமிழ் மணக்கும். அந்தத் தமிழில் இனிமை மணக்கும்!’

இன்று எங்கே அந்தத் தமிழ்? எங்கேயந்த அறிவின் மலை? பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அன்பாலும் அறிவுத் திறனாலும், ஆண்டு புகழ் குவித்த அந்த பூத உடல் போய் விட்டதே! அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும் தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்து விட்டுப் போனாரா? இல்லை... அதைவிடப் பெரிய பொறுப்புகளை அந்த இருபத்தொரு வயது மெல்லியலாளின் பூந்தோளுக்குச் சுமையாக விட்டுப் போயிருக்கிறார்.

குளிர் தாங்காமல் மரவட்டைகளைப் போல் சுருண்டு படுத்துக் கொண்டு துாங்கும் தம்பிகளையும் தங்கைகளையும் பார்த்தாள். பூரணி தலையணை போனது தெரியாமல் விரிப்புகளும், போர்வைகளும் விலகிய நிலையில் தரையில் சுருண்டு கிடந்த உடன் பிறப்புகளைப் பார்த்த போது திருமணமகாத அந்தக் கன்னிப் பருவத்திலேயே ஒரு தாயின் பொறுப்பைத் தான் சுமக்க வேண்டியிருப்பதை அவள் உணர்ந்தாள்.

உடன் பிறப்புகளை நேரே விரிப்பில் படுக்கச் செய்து போர்வையைப் போர்த்திவிட்டு நிமிர்ந்தபோது எதிர்ச் சுவரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/14&oldid=1234342" இலிருந்து மீள்விக்கப்பட்டது