பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 13 அப்பாவின் பெரிய படம் பூரணியைப் பார்த்துச் சிரித்துக் கொண் டிருந்தது. அவள் அப்படியே அந்தப் படத்தைப் பார்த்தவாறே நின்று விட்டாள். அவர் தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.

இயற்கையாகவே அவருக்கு அழகாக மலர்ந்த முகம், ஆழமான படிப்பும் மனத்தில் ஏற்பட்ட அறிவின் வளர்ச்சியும் அந்த அழகை வளர்த்து விட்டிருந்தன. அவருக்கென்றே அமைந் தாற் போல அற்புதமான கண்கள். அன்பின் கனிவும், எல்லோரை யும் எப்போதும் தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறாற்போல் ஒரு பரந்த தாய்மை உணர்வும் அமைந்த கண்கள் அவை. எடுப்பாக நீண்டு அழகாக விளங்கும் நாசி. சும்மா இருந்தாலும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாற் போலவே எப்போதும் தோன்றும் வாயிதழ்கள். அந்தக் கண்களும், அந்த முகமும், அந்தச் சிரிப்பும் தான் மாணவர்களைக் கொள்ளை கொண்டவை. எவ்வளவு பெரிய நிலையில் எத்தனை சிறந்த பதவியில் இருந்தாலும் நான் தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் மாணவன் என்று பிற்கால வாழ்விலும் சொல்லிச் சொல்லி மாணவர்களைப் பெருமை கொள்ளச் செய்த திறமை அது.

பூரணி, பெருமூச்சு விட்டாள் அப்படியே விளக்கை அணைத்து விட்டு, மறுபடியும் இருட்டில் உட்கார்ந்து அப்பா காலமான துக்கத்தை நினைத்துக் குமுறிக் குமுறி அழ வேண்டும் போல் இருந்தது. கண்ணிரில் துக்கம் கரைகிறது. அழுகையில் மனம் இலேசாகிறது.

பூரணி மெல்ல நடந்து சென்று அப்பாவின் படத்தை மிக அருகில் நின்று பார்த்தாள். கோயில் கருப்பக்கிருகத்தில் உள்ள தெய்வ விக்கிரகத்தின் அருகில் நின்று நேர்ந்தால் உண்மை பக்தனுக்கு மெய்சிலிர்க்கும் அல்லவா! அப்படி மெய்சிலிர்த்தது பூரணிக்கு. நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றன. .

அப்பாவின் முகத்தில் தெரிகிற சிறிது முதுமை கூட அம்மாவின் மரணத்துக்குப் பின் படிந்த முதுமைதான். அம்மா இறந்த போது கூட அவர் வாய் விட்டு அழவில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/15&oldid=555739" இலிருந்து மீள்விக்கப்பட்டது