பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 குறிஞ்சிமலர் பாய்ந்து வீசியது. கண்ணுக்கு முன் தெரிந்த உலகத்தின் துன்பங் களில் உள்ளத்தின் துன்பங்களை மறக்க முயன்று கொண்டே கோவிலுக்குள் நுழைந்தாள் பூரணி. எல்லா சந்நிதிகளிலும் வழிபாட்டை முடித்துக் கொண்டு பொற்றாமரைக் குளத்தின் படிகளில் போய் உட்கார்ந்தாள். அந்த இடத்தில் குளத்துக்கு நேரே மேலே திறந்த வெளியாக வானம் தெரிந்தது. திரையைக் கிழித்து யாரோ எழுதி வைத்திருந்த சித்திரத்தைக் காட்டினாற் போல் விண்மீன்கள் சிதறிய கரு நீல வானம் அழகாய்த் தோன்றியது. அப்போதைய மனநிலையில் நட்சத்திரங்களைப் பற்றித் தமிழகத்துக் கவிஞர் ஒருவர் கற்பனை செய்திருப்பது நினைவு வந்தது அவளுக்கு. உலகத்துத் துன்பங்களைப் பகற் போதெல்லாம் கண்டுகண்டு வெதும்பிக் கொதித்ததன் காரணமாக இரவில் வானத்து மேனி மீது கொப்பளித்த கொப்புளங்களே நட்சத்திரங்கள். - நினைத்துப் பார்ப்பதற்குச் சுவையாயிருந்தது இந்தக் கற்பனை.

பூரணி இங்கே உட்கார்ந்து என்ன பார்த்துக் கொண் டிருக்கிறாய்?' படிக்கட்டுகளுக்கு மேலேயிருந்து அவளுக்குப் பழக்கமான குரல் கேட்டது. மேலே படிகள் முடிந்து கல் தரையுடன் கலக்கிற இடத்தில் நெற்றியில் கோவில் குங்குமமும் இதழ்களில் குறுநகையுமாக அரவிந்தன் நின்று கொண் டிருந்தான். கழுத்தில் வளைத்துச் சுற்றின கைக்குட்டையும் முன் நெற்றியில் வந்து விழும் கிராப்புத் தலையுமாக வெற்றிலைக் காவியேறிய உதடுகளோடு இன்னோர் இளைஞனையும் அரவிந்த னுக்குப் பக்கத்தில் கண்டாள் அவள் மற்போர் செய்பவர்களுக்கு இருப்பது போல் தேகக் கட்டும் இருந்தது அரவிந்தனோடு இருந்தவனுக்கு. அப்படி ஒர் ஆளோடு சேர்ந்து அரவிந்தனைப் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தது பூரணிக்கு. இருவரும் கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தால் அந்த முரட்டு ஆள் அரவிந்தனுடன் வந்தவன் தான் என்று தோன்றியது. இருவரும் படிகளில் இறங்கி அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது படித்துறையில் சிறிது தள்ளித் தனக்கு வலப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் மேல் தற்செயலாக அவள் பார்வை சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/150&oldid=555874" இலிருந்து மீள்விக்கப்பட்டது