பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 குறிஞ்சிமலர்

உள்ளமே இறுக்கத்திலிருந்து தானாக நெகிழ்ந்து அவளைக் குடைகிறதே.

அடி பூரணி இவ்வளவு வண்மைகூட உன் மலர் மனதுக்கு உண்டா? கோழைத்தனம் தான் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கிறதென்று மங்களேஸ்வரி அம்மாளிடம் சினத்தோடு கூறினாயே? அந்தக் கோழைத்தனம் இப்போது எங்கே இருக்கிறதென்று நீயே நன்றாகச் சிந்தித்துப் பார். உன்னிடமல்லவா அசட்டுக் கோழைத்தனமெல்லாம் இருக்கிறது. அன்பு செலுத்துவதற்குக் கூடத் தைரியமில்லாதவள் நீ. எவன் தன் உள்ளத்தில் உன்னைக் காவியமாக்கி இடைவிடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறானோஅவனோடு நாலு பேருக்கு முன்னால் நின்று சிரித்துப் பேசக்கூடப் பயப்படுகிறவள் நீ. யாருக்காகப் பயப்பட்டாய்? எதற்காகப் பயந்து நடுங்கி முகத்தை முறித்துக் கொண்டு ஓடிவந்தாய்? நூறு ரூபாய்க்காசுக்கும் அதைக் கொடுக்கும் ஒரு காரியதரிசியின் குறுகிய மனத்துக்கும் பயந்துதானே இப்படிச் செய்தாய்? உனக்காகத் தன்னையே கொடுத்தானே அவன் பெரியவனாகப் படவில்லை உனக்கு; நீ பெரிய வஞ்சகி."

மனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்ஷா ஒடிக் கொண்டிருந்தது. சைக்கிள் ரிக்ஷாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் கொண்டிருந்தது.

ரிக்ஷாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு வாயிலில் இறங்கி உள்ளே நடந்த போது நடைப்பிணம் போல் பொலிவிழந்து காணப்பட்டாள். தெருவில் மயில் வாகனத்தில் புறப்பட்டு முருகன் தெய்வத் திருவுலா வந்து கொண்டிருந்தான். அதிர் வேட்டுகள் அதிர்ந்தன, மேளக்காரர்களும் நாயனக்காரர்களும் இசை வெள்ளம் பெருக்கிக் கொண் டிருந்தார்கள். தம்பிகளும் குழந்தைகளும் மயில்வாகனம் பார்க்க வாசலுக்கு ஓடிப் போய்க் குழுமியிருந்தார்கள். பூரணி உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/152&oldid=555876" இலிருந்து மீள்விக்கப்பட்டது