பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 58 குறிஞ்சிமலர்

அவளால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வந்தவர்கள் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து பார்த்துவிட்டு 'நீ நாளைக்குத் தண்ணீர் விட்டுக்கொள்ளலாம்: என்று கூறிச் சென்றார். அவரை அனுப்பி விட்டுப் பூரணி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே காலையில் வந்த செய்தித் தாளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'அக்கா... ஓர் ஐந்து ரூபாய் வேண்டும்.'

முகத்தை மறைத்தாற் போல் தூக்கிப்பிடித்து வாசித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே தணித்துக் கொண்டு எதிரே பார்த்தாள் பூரணி. தம்பி திருநாவுக்கரசு தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.

'இப்போது எதற்கடா பணம்? போன வாரம் தானே சம்பளம் கட்டினாய்?"

'சம்பளத்துக்காக இல்லையக்கா... பரீட்சை நெருங்குகிறது! கொஞ்சம் நோட்டுப் புத்தகங்களும் ஒரு புதுப் பேனாவும் வாங்க வேண்டும். இப்போதிருக்கிற பேனா எழுதும் போது மை கசிகிறது...' -

பூரணி தம்பியின் முகத்தை நன்றாகப் பார்த்தாள். எதையோ மறைத்து எதற்கோ தயங்கித் தயங்கிப் பேசினான் திருநாவுக்கரசு.

'ஏண்டா சட்டை இவ்வளவு அழுக்காக இருக்கிறது ? குளித்தாயோ இல்லையோ? தலைவாரிக் கொள்ளாமல் இப்படிக் காடு மாதிரி ஆக்கிக் கொண்டுதான் பள்ளிக் கூடம் போக வேண்டுமோ? என்னதான் படிப்பு அதிகமாக இருக்கட்டுமே? அதற்காக இப்படியா இருப்பாய்? காலையில் ஒன்பது மணிக்கு முன்னாலேயே பறந்து கொண்டு ஓடுகிறாய்? மாலையில் நெடுநேரம் கழித்துத் திரும்புகிறாய். நீ எங்கே போகிறாய், எப்போது திரும்புகிறாய் ஒன்றுமே தெரியவில்லை, வீட்டில் புத்தகத்தையே தொடுவதில்லை. எங்கே தான் படிக்கிறாயோ? என்னதான் செய்கிறாயோ?"

தம்பி தலையைக் குனிந்தான்; கை சட்டைப் பித்தானில் விளையாடியது. கால் தரையைத் தேய்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/160&oldid=555884" இலிருந்து மீள்விக்கப்பட்டது