பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 159

'அலமாரியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு போ; சாயங்காலம் புதுப் பேனாவையும், நோட்டுப் பத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க வேண்டும். வர வர உன் போக்கு எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. வயது ஆகிறதே ஒழியக் குடும்பப் பொறுப்புத் தெரியவில்லையே உனக்கு!' என்று தம்பியிடம் கண்டித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி. சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தாகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டா யிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது, ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம் இது. இந்த வயதில் நல்ல பழக்கங்கள் கீழே விழுந்து சிதறிவிட்டால் பின்பு ஒன்று திரட்டி உருவாக்குவது கடினம். இதனால் தான் பூரணி தம்பி திருநாவுக்கரசைப் பற்றிக் கவலை கொள்ளத் தொடங்கியிருந்தாள். பள்ளிக் கூடத்தில் திருநாவுக்கரசு எப்படி நடந்து கொள்கிறான் என்று சிறிய தம்பி சம்பந்தன் மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தாள் பூரணி. "அண்ணனுக்கு விடலைப் பிள்ளைகளோடு பழக்கம் அதிகரித்திருக்கிறது அக்கா. வகுப்புகளுக்கு வராமல் ஏமாற்றி விட்டு எங்கெங்கோ போய் விடுகிறான். ஆசிரியர்களுக்கு அடங்குவதில்லை. நான் ஏதாவது கேட்டால், அக்காவிடம் சொன்னாயோ, உன் முதுகுத் தோலை உரித்து விடுவேன்' என்று என்னைப் பயமுறுத்துகிறான், அக்கா!' என்று சம்பந்தன் அவளுக்குச் சொல்லியிருந்தான். இருக்கிற கவலைகள் போதாதென்று இப்போது தம்பியைப் பற்றிய இந்தப் புதுக் கவலையும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தது.

அவளுக்குச் செய்தித்தாளைப் படிப்பதில் மனம் இலயிக்க வில்லை. திருநாவுக்கரசு பணம் எடுத்துக் கொண்டு போன பின் அலமாரியில் போய்த் தொகையை எண்ணிப் பார்த்தாள். ஐந்து ரூபாய்க்குப் பதில் பத்து ரூபாய் குறைந்தது. அவள் திகைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/161&oldid=555885" இலிருந்து மீள்விக்கப்பட்டது