பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 189

அரவிந்தன் நெடுமூச்சு விட்டான். முருகானந்தத்தின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனச் சிந்தித்தான். சிறிது நேர அமைதிக்குப்பின் அவன் முருகானந்தத்தை நோக்கிச் சொல்ல லானான்:

'வழி தவறுகிற இந்தத் துணிச்சல் எங்கிருந்து பழகத் தொடங்குகிறது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. இன்னும் சிறிது காலத்துக்குக் கணக்கும், வரலாறும், விஞ்ஞான மும் கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாமா என்றுகூடத் தோன்று கிறது. சுதந்திரமும் உரிமைகளும் பெருகுவதற்கு முன்னால் படிக்காதவர்களில் சிலர் அறியாமையால் தவறு செய்து கொண்டிருந்தார்கள். இப்போதோ படித்தவர்கள், தவறுகளை அவை தவறுகளென அறிந்து கொண்டே செய்கிறார்கள். கீழ்நாட்டு வாழ்வின் அசெளகரியங்கள் நிறைந்த ஏழைக் குடும்பங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு மேல்நாட்டு வாழ்வின் செளகரியங்களையும் ஆடம்பரங்களையும் கற்பித்து அனுப்பி விடுகிறார்கள். வட்டமான டப்பாவுக்கு சதுரமான மூடி போடுகிற மாதிரி ஏழை நாட்டில் ஆடம்பரக் கனவுகள் சிறிதும் பொருந்த மாட்டேனென்கின்றன. -

அரவிந்தனை இந்த மாதிரிக் கருத்து வெள்ளமாகப் பேசுவதற்குத் தூண்டிவிட்டுக் கேட்பதில் முருகானந்தத்துக்குத் தனி ஆனந்தம். மனம் உருகித் துடிப்போடு இப்படி அவன் பேசுகிற சந்தர்ப்பங்கள் எப்போதாவது அத்திபூத்த மாதிரித்தான் வாய்க்கும். அப்படி வாய்கிற நேரங்களில் அந்த அறிவு வெள்ளத்தில் நன்றாக மூழ்கி எழுந்து விடுவது முருகானந்தத்தின் வழக்கம், அரவிந்தன் மேலும் தொடர்ந்தான் 'நீ தான் தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறாயே, முருகானந்தம் ஓடிப்போதல், பணத்தை எடுத்துக் கொண்டு தனியே போதல் - என்று.இளைஞர் களையும், யுவதிகளையும் பற்றி எவ்வளவு சேதிகள் வருகின்றன? அவ்வளவுமா பொய்யாக இருக்கும்? எப்படி எப்படி எந்தச் சமயங்களில் தவறு செய்யாலாமென்பதைச் செய்தித்தாள்களே கற்றுக் கொடுக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/191&oldid=555914" இலிருந்து மீள்விக்கப்பட்டது