பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 குறிஞ்சிமலர்

மலர்ந்து பிரியும். ப, ம இந்த இரண்டு எழுத்துக்களையும் உதடு மலராமல் சொல்லவே முடியாது.”

தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்து கொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் தமிழ்' என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்து கொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்று வித நிலைகள் இருந்தன.

அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஒர் உறவு. அந்த உறவுதான் மற்ற உறவுகளுக்கும் காரணம். ஒருவருக்கொருவர் தத்தம் இலட்சியங்களையும் உள்ளங்களையும் உணர்ந்து பழகிய அன்புப் பழக்கம் ஒர் உறவு. அது அந்தரங்கமான உறவு. இதயங்களுக்கு மட்டுமே புரிந்த உறவு அது. வாழ்க்கையின் நடைமுறையில் ஆண்களும் பெண்களும், முகத்தையும் உடம்பையும் பார்த்துக் கொள்கிற இச்சைக் காதல் அன்று அது. மெல்லிய மனஉணர்வுகளில் நுணுக்கமாகப் பிறக்கும் காவியக் காதல் அவர்களுடையது. மூன்றாவது நிலை அறிவுக்கடலாய் விளங்கும் அவள், தமிழின் நுணுக்கங்களைப் பற்றிப் பேசுகிற போது அவன் சாதாரண மாணவனைப் போல் ஆகிக் கேட்டுக்கொண்டிருக்கிற உறவு. அரவிந்தன் கவிஞன், சிந்தனையாளன், இலட்சியவாதி, அழகன் எல்லாமாக இருந்தும் ஞானச்செல்வி போல் அவள் தமிழை வாரி வழங்கும்போது அவள் முன் தன் கம்பீரங்களை மறந்து சிறுபிள்ளை போல் கேட்டுத் தெரிந்து கொள்வதே இன்பமாக இருந்தது அவனுக்கு. முருகானந்தம் தன்னிடம் அப்படி இருப்பதையும் அவன் உணர்ந் திருந்தான். நண்பனைப் போல் தோளோடுதோள் பழகினாலும் சில சமயங்களில் முருகானந்தம் தன்முன் மாணவனாக அமர்ந்து விடுவதைப் போன்று, தன் இதயம் கவர்ந்து, தனக்கு இதயம் கொடுத்தவளாகப் பழகினாலும் பேராசிரியராகிய தந்தையிடம் கற்றிருந்த பேருண்மைகளைப் பூரணி பேசும் போது அவன் குழந்தைபோலாகிக் கேட்டுக் கொண்டிருந்து விடுவதிலேயே இன்பங் கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/200&oldid=555923" இலிருந்து மீள்விக்கப்பட்டது