பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 211

அம்மாளின் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வருவதற்காகத் திருச்சிக்குப் புறப்பட்ட அன்று அரவிந்தன் சொன்ன வார்த்தைகள் அவள் உள்ளத்தில் உறைத்துத் தைத்திருந்தன. "நீ நாள் தவறாமல் தமிழ்ப்பெண்மையின் சிறப்பைப் பற்றி உங்கள் கழகத்தில் பேசுகிறாய்! அதனால் என்ன பயன் கெட்டுப் போகிறவர்கள் கெட்டுப் போய்க் கொண்டுதானே இருக்கிறார்கள்' என்று அவன் வேடிக்கையாகக் குத்திக்காட்டிப் பேசியதை மெய்யாகவே தன்னை நோக்கி விடுவிக்கப்பட்ட அறைகூவலாக எடுத்துக் கொண்டிருந்தாள் அவள். அறிவுத் துடிப்பு நிறைந்த அவள் நெஞ்சத்தில் 'உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்துக்கு நீ ஏதாவது புதிதாகச் செய்! பெரிதாகச் செய்! உன்னையும் உன் சொற்பொழிவு களையுமே நீ ஏன் ஓர் இயக்கமாகச் செய்து கொள்ளக் கூடாது? என்று ஒர் உள்ளுணர்வு கிளர்ந்தது. வளம் நிறைந்த நல்ல மண்ணில் முளைத்த துளசிச் செடி போல் பசுமை, தழைத்து மணம் பரப்பி நாளுக்கு நாள் புனிதமாக வளர்ந்தது இந்த உள்ளுணர்வு. மனத்தில் ஞானம் மலர மலர அவளுடைய முகப் பொலிவு அற்புதமாக வளர்ந்தது. அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளை ஏற்றுக் கொண்டு நடத்தத் தொடங்கிய காலத்தில் அங்கும் இங்குமாகச் சிலருக்குத்தான் மதுரையில் அவளைத் தெரிந்திருந்தது. இப்பொழுது அவளை நகரம் முழுவதும் அறிந்திருந்தது. சுற்றுப் புறத்து ஊர்களிலும் அவள் பெயர் பரவி யிருந்தது. அவளுடைய இந்த இணையற்ற வளர்ச்சிக்குப் பாடு பட்ட பெருமையில் மூவருக்குப் பங்கு உண்டு. அரவிந்தன் அவள் வளர்ச்சிக்கு உற்சாகம் தந்தான். மீனாட்சி சுந்தரம் - அவளுடைய தந்தையின் நூல்களையெல்லாம் வெளியிட்டு நன்றா கவும், நிறையவும் விற்று உதவினார். அதனால் அவளுடைய வாழ்க்கைக் கவலைகள் குறைந்து அமைதி கிடைத்தது. எப்படியோ கெட்டுச் சீரழிய இருந்த தம்பி திருநாவுக்கரசையும் அச்சகத்தில் படிப்படியாகத் தொழில் பழக்கி உழைப்பாளியாக மாற்றி வளர்த்திருந்தார்கள், அரவிந்தனும் அவரும். அவள் அண்மையிலுள்ள வெளியூர்களுக்குச் சொற்பொழிவுக்குப் போக நேரும் போதெல்லாம் மீனாட்சி சுந்தரமும் மங்களேஸ்வரி அம்மாளும் கார் கொடுத்து உதவினார்கள். முருகானந்தம் - வேறு ஓர் உதவியைச் செய்தான். உழைக்கும் மக்கள் நிறைந்த தனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/213&oldid=555936" இலிருந்து மீள்விக்கப்பட்டது