பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 217

கொழுந்து போன்ற பரிசுத்த வாழ்வு இவற்றுக்கெல்லாம் அப்பால் அந்தச் சாதாரணப் பெண்களிடம் இருக்கிற ஏதோ ஒன்று தன்னிடம் இல்லாமல் இருப்பதை அவள் உணர்ந்தாள். அவளுடைய உள்ளத்தின் ஒரு மூலையில் அந்த ஏதோ ஒன்றின் இல்லாமைக்காக மின்னற்கோடு போல் ஓர் ஆற்றாமை தோன்றி ஒரு கணம் நின்று மறைந்தது.

சும்மா வந்து வெற்றிலைப் பாக்கு வாங்கிக்கொண்டு நழுவிவிடப் பார்க்காதே, ஏதாவது இரண்டு பாட்டுப் பாடி விட்டுப் போ பூரணி என்று காமுவே உரிமையோடு எழுந்து வந்து அவளைக் கையைப் பிடித்து இழுத்து உட்காரவைத்து விட்டாள். அவள் உள்ளம் பாடுகிற உற்சாகத்திலா அப்போது இருந்தது? மறுக்க முடியாமல் தேவாரத்தில் ஒரு பதிகத்தைப் பாடி முடித்தாள் பூரணி.

'கொல்லர் தெருவில் ஊசி விற்கிறாற்போல ஒதுவார் வீட்டிலேயே தேவாரத்தைப் பாடி ஏமாற்றிவிட்டுப் போகப் பார்க்கிறாயே? வேறு ஏதாவது பாடு' என்று மேலும் வம்பு செய்தாள் காமு. அவளுடைய உற்சாகத்தை முறித்தெறிந்து விட்டுப் புறப்பட முடியாமல் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் ஒரு பாட்டுப் பாடிவிட்டு, 'எனக்கு நேரமாகிறது. நான் போக வேண்டும். தங்கை மங்யைர்க்கரசி கடைசி வரை உன்னோடு இருப்பாள். நான் வருகிறேன்" என்று எழுந்திருந்தாள் பூரணி.

'பாட்டியிடமும் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டு போய் விடலாம் என்று உட்பக்கம் போனவள் மற்றொரு அதிர்ச்சியை யும் தன் செவிகளில் ஏற்றுக் கொள்ளவேண்டியிருந்தது. அங்கே பாட்டி வேறு யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தாள். பேச்சு தன்னைப் பற்றியது போல் தோன்றவே, பூரணி வெளியிலேயே தயங்கி நின்றாள்.

“யாரு அந்தப் பெண்? கோவில் மாடு மாதிரி வளர்ந்திருக்கு, கல்யாணம் ஆகவில்லை என்கிறாயே?"

'தமிழ் வாத்தியார் அழகிய சிற்றம்பலத்தின் பெண். பூரணின்னு பேர். அதுக்கு இரண்டு தம்பி, ஒரு தங்கை, ஒரு தம்பி படிப்பை விட்டுவிட்டுச் சீர்கெட்டுக் கடைசியாகப் பிரஸ்ஸிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/219&oldid=555942" இலிருந்து மீள்விக்கப்பட்டது