பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 281

பற்றி இவ்வளவு சர்வ சாதாரணமாக மதிப்பிடுகிறார்களே, அவர்கள் என்றுதான், அவன் வருந்தினான். கேதத்துக்கு (அந்திமக் கிரியை) மதுரையிலிருந்து இரண்டொரு உறவினர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மதுரை நகரின் அரசியல் வட்டாரத்தில் செல்வாக்குள்ளவர், வயது முதிர்ந்தவர். நீண்ட நாட்கள் அனுபவசாலி. ஈமச் சடங்கு முடிந்து மயானத்திலிருந்து திரும்பி வரும்போது அவர் கூறிய செய்தி அரவிந்தனைத் திகைப்பில் ஆழ்த்தி விட்டது. அவன் பரம ரகசியம் என்று நினைத்துக் கொண்டிருந்த செய்தியை எல்லோருக்கும் நடுவில் அவர் வெளிப்படையாக விசாரித்தார்.

"என்னப்பா தம்பி, உன் முதலாளி அந்தப் பெண் பூரணியைத் தேர்தலில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்கிறாராமே? உனக்குத் தெரிந்திருக்குமே?” -

அவருடைய கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அரவிந்தன் தயங்கியபோது அவரே மேலும் கூறினார். அவர் வாயிலாக முக்கியமானதொரு செய்தி வெளிவந்தது.

'மீனாட்சி சுந்தரம் இதில் எல்லாம் கெட்டிக்காரர் தான் அப்பா. விவரம் தெரிந்துதான் செய்வார். ஆனால் எனக்குத் தெரிந்ததையும் சொல்கிறேன். எதற்கும் அவர் காதில் போட்டு வை. அந்தத் தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. புதுமண்டபத்தில் ஒரு புத்தகக் கடைக்காரன் இருக்கிறான். முரடன், எதற்கும் துணிந்தவன், அவனே நிற்கப்போவதாகக் கேள்வி' என்று அவர் கூறிக் கொண்டே வந்தபோது அரவிந்தன் குறுக்கே மறித்து, 'யார் தாத்தா அந்தப் புத்தகக் கடைக்காரர்?' என்று கேட்டான். அவன் சந்தேகம் சரியாயிருந்தது. அவர்களுக்கு விரோதியான அந்த ஆளின் பெயரைத்தான் கிழவர் கூறினார். அவன் மிகவும் மும்முரமாகத் தேர்தலில் இறங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். அப்போதே புறப்பட்டுப் போய்க் கோடைக்கானலில் அவர்களுக்கு இச்செய்தியை அறிவித்து விடவேண்டும் போல் அரவிந்தனுக்குத் துடிப்பு உண்டாயிற்று. . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/283&oldid=556006" இலிருந்து மீள்விக்கப்பட்டது