பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 - குறிஞ்சி மலர் இறங்கிப் போய்விட்டதுபோல் தோன்றுகிறது. ஒரே காலத்தில் இரண்டுவிதமான பூரணிகளோடு பழகுகிறோமோ? என்று அரவிந்தன் மருண்டான்.

'உணர்ச்சிகளும், ஆசைகளும், அன்பும், பெண்மையும் நிறைந்த பூரணி என்னும் அழகு மங்கை வேறு: கையில் தீபத்தை ஏந்திக் கொண்டு இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே பாதை வகுத்துக் கொண்டு நடந்து செல்வதாகக் கனவு காணும் பூரணி வேறு. இதில் எந்தப் பூரணி அவனைக் காதலிக்கிறாள்? எந்தப் பூரணியை அவன் காதலிக் கிறான்? இந்த இரண்டு பூரணிகளில் அவனுடைய மானிடக் கைகளினால் எட்டிப் பறிக்க முடிந்த சாமானிய உயரத்தில் பூத்திருக்கும் பூரணி யார்? அல்லது பிஞ்சு அரும்புகிற காலத்தில் பூவிதழ்கள் சுழன்று கீழே விழுந்து விடுவதைப் போல் இந்த இரண்டு பேரில் முடிவாகக் கணிகின்ற பூரணி ஒருத்தியாகத்தான் இருக்க முடியுமா? நீண்ட நேர மெளனத்துக்குப்பின் அரவிந்தன் அவளிடம் மெல்லக் கேட்டான்: 'அரசியலில் பங்குகொள்ள நேரிடுவதால் உன்னுடைய இந்த இலட்சியக் கனவு கலைந்து பாழாகிவிடும் என்று நீ பயப்படுகிறாய்?"

'பயப்படவில்லை! ஆனால் தயங்குகிறேன். நீங்களும் அவரும் சேர்ந்து வற்புறுத்தினால் அந்தத் தயக்கத்தைக் கூட நான் உதறிவிடும்படி நேரலாம்.'

'நீ அப்படித்தான் செய்ய நேரிடும் போலிருக்கிறது பூரணி:

'பார்க்கலாம்.'

இதன்பின் அவர்கள் வேறு செய்திகளைப் பற்றிப் பேசினார்கள். முருகானந்தம் - வசந்தா காதலைப் பற்றிக் குறிப்பாகச் சொன்னாள் பூரணி.

"உனக்கு முன்னாலேயே அந்த இரகசியம் எனக்குத் தெரியும் பூரணி. நண்பனின் காதல் வெற்றிபெறுவதற்கான சம்மதத்தையும் ஒருவ்ாறு அந்த அம்மாளிடமிருந்து பெற்றுவிட்டேன்' என்று தொடங்கி முதல்நாள் மதுரையில் மங்களேசுவரி அம்மாளுக்கும் தனக்கும் நடந்த பேச்சுக்களைச் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/328&oldid=556051" இலிருந்து மீள்விக்கப்பட்டது