பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 349

வேண்டியிருக்கிறது? நான் வருகிறேனப்பா. இப்போதே வேண்டுமானால் புறப்படு' என்று விவரம் புரிந்து கொண்டதும் முக மலர்ச்சியோடு வருவதற்கு ஒப்புக்கொண்டு விட்டான் அரவிந்தன்.

நண்பகலில் எங்கும் வெளியேற முடியாதபடி அத்தனை நாட்கள் அவன் ஊரில் இல்லாமையால் சுமந்து கிடந்த வேலைகள் அச்சகத்தில் குவிந்திருந்தன. பூரணி தேர்தலில் நிற்கச் சம்மதம் கொடுத்துவிட்டதனால் மீனாட்சிசுந்தரம் அது சம்பந்த மான ஏற்பாடுகளுக்காகவும், வேலைகளுக்காகவும் இப்போதே அலைவதற்குத் தொடங்கியிருந்தார். அத்தனை வயதுக்குமேல் திடீரென்று இளைஞராகி விட்டாற் போன்ற அவ்வளவு சுறுசுறுப்போடும் உற்சாகத் தோடும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். அச்சகத்துக்கு வந்திருந்த முக்கியமான கடிதங்களுக்கு மறுமொழி எழுதியும், கணக்குகளைச் சரிபார்த்தும், திருத்த வேண்டிய அச்சுப் பிரதிகளைத் திருத்தியும், அசைந்து கொடுக்க நேரமில்லாமல் வேலைகளைச் செய்தான் அரவிந்தன். மாலை ஐந்தரை மணிக்கு வேலைகள் முடிந்து முகங்கழுவி உடை மாற்றிக் கொண்டு அவன் தயாராக இருந்தபோது முருகானந்தம் வந்து அழைத்துக் கொண்டு போய்விட்டான். இருவரும் பேசிக் கொண்டே நடையில் கிளம்பிவிட்டார்கள். மதுரை மில்லுக்கு அருகில் இரயில் பாதை 'லெவல் கிராசிங்'கில் நடந்துபோக இடமில்லாமல் ஒரே கும்பலாக இருந்தது. அந்த வழியாகத்தான் அவர்கள் பொன்னகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.

"கொஞ்சம் இரு அரவிந்தன்! அது என்ன கும்பலென்று பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்' என்று கூறி அரவிந்தனை நிறுத்திவிட்டுக் கும்பலுக்குள் புகுந்தான் முருகானந்தம்.

சிறிது நேரம் கழித்து அவன் கூட்டத்திலிருந்து வெளியேறி வந்தான்.

'வா... போகலாம் அரவிந்தன்' என்று அரவிந்தனுடைய கையைப் பிடித்துக்கொண்டே மேலே வழி விலக்கிக் கொண்டு நடந்தான் முருகானந்தம்.

'மாலையில் வெளியான செய்தித்தாளில் ஏதோ பரீட்சை முடிவு வெளியாயிற்றாம். பரீட்சையில் தேறாத மாணவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/351&oldid=556074" இலிருந்து மீள்விக்கப்பட்டது