பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 377

'இந்த மூன்று நாட்களாக நீ பேசியிருக்கிற பேச்சுக்குக் கண்ணேறு பட்டுவிடக் கூடாதடி, பெண்ணே உடம்புக்கு ஒன்றும் வந்துவிடாமல் சுகமாக ஊருக்குப் போய்ச் சேர வேண்டும்! அடுப்பில் எவ்வளவு மிளகாயைப் போட்டேன்? கொஞ்சமாவது நெடி ஏறுகிறதா பாரேன், நிறையக் கண்பட்டிருக் கிறதடி அம்மா?' என்று ஆதரவோடு அருகில் வந்து பூரணியின் கூந்தலைக் கோதி விட்டாள் அந்த அம்மாள்.

தமிழ் விழா முடிந்து மறுநாள் உள்ளூர் ரோட்டரி சங்கத்தில் 'பழைய அற நூல்களும், புதிய வாழ்க்கைநெறிகளும்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு சொற்பொழிவு செய்தாள் பூரணி. செல்வமும் அறிவும் நிறைந்த ரோட்டரி உறுப்பினர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது அந்தச் சொற்பொழிவு. மூன்று நாள் விழாவில் அவளுடைய நாவண்மை, தமிழை அழகு செய்ததைக் கண்டவர்கள் அன்று ஆங்கிலத்தையும் அழகுற ஆட்சி புரிந்ததைக் கண்டு போற்றினார்கள். 'ஏதோ ஒரு பேனாவுக்கு அதை விடச் சிறிதாகவோ, பெரிதாகவோ வேறு ஏதோ ஒரு பேனாவின் மூடியைப் பொறுத்த முயல்வதுபோல் நமது பழைய அற நூல்களின் முடிவுகள் புதிய வாழ்க்கை நெறி களோடு நன்றாகப் பொருந்துவதில்லை. கிழக்கு நாடுகள் எளிமையில் தூய்மை கண்டவை. கீழ்நாட்டு வாழ்வின் வசதிக் குறைகளை வைத்துக்கொண்டு மேல்நாட்டு ஆடம்பரங்களை விரும்பும் புதிய வாழ்க்கை நெறியைப் பழகிக் கொண்டு விட்டோம். பழைய அற நூல்கள் 'அறமும் ஒழுக்கமும்தான் வாழ்க்கையை நன்றாக நடத்த ஏற்ற கருவிகள் என்கின்றன. பணமும் சூழ்ச்சித் துணிவும் தான் வாழும் நெறிகள், என்பது புதிய வாழ்வில் தெரிகிறது. இப்படி எடுப்பாகத் தொடங்கிய சரளமான ஆங்கிலச் சொற்பொழிவு மிக நன்றாகவும் புதுமை யாகவும் இருந்தது. மங்களேசுவரி அம்மாள் பேச்சுக்களைப் பதிவு செய்யும் டேப் ரிக்கார்டர் கருவியைக் கொண்டு வந்திருந்ததினால் பூரணி பேசுகிற இடங்களில் எல்லாம் அதைப் பதிவு செய்து கொண்டாள். பூரணி இலங்கையில் பல பகுதிகளில் செய்யும் சொற் பொழிவுகளை ஊருக்குத் திரும்பியதும், மங்கையர் கழகத்துப் பெண்களும், மற்றவர்களும் கேட்கச் செய்ய வசதியாயிருக்கும் என்றே டேப் ரிக்கார்டர் கொண்டு வந்திருந்தாள் அந்த அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/379&oldid=556102" இலிருந்து மீள்விக்கப்பட்டது