பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 குறிஞ்சிமலர்

தாமரைப்பூச் சின்னமும் புது மண்டபத்து மனிதருக்குக் கழுகுச் சின்னமும் அமைந்திருந்தன.

தேர்தல் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டுவதில்தான் முதன் முதலாகத் தகராறு ஆரம்பமாயிற்று. அரவிந்தன் மனம் கொதித்துக் குமுறும்படியான நிகழ்ச்சி அப்போது தான் நடந்தது.

மதுரையைப் போன்ற பெரிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்குப் பெரும்பாலும் பகல் நேரங்களில் வசதிப்படாது. அதனால் ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கு வாடகைக்குப் பேசின குதிரை வண்டியொன்றில் சுவரொட்டிகளை நிரப்பி, பசை, ஏணி முதலிய கருவிகளோடு பூரணியின் தம்பி திருநாவுக் கரசையும் வேறு சில கூலிக்காரப் பையன்களையும் உடன் அனுப்பினான் அரவிந்தன். பொழுது நன்றாக விடிவதற்குள் முடிந்தவரை சுவரொட்டிகளை ஒட்டி விட்டுத் திரும்பிவிட வேண்டுமென்றும், எஞ்சிய இடங்களில் மறுநாள் இதே நேரத்துக்குப் போய் ஒட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு. கூலிக் காரப் பையன்களுக்கு முக்கியமான இடங்களைக் காட்டி ஒட்டச் செய்யவும், அவர்கள் சுவரொட்டிகளைத் திருடிக்கொண்டுபோய் வீசைக் கணக்கில் விலைக்கு நிறுத்துவிடாமல் கவனித்துக் கொள்ளவுமே திருநாவுக்கரசை உடன் அனுப்பியிருந்தான் அரவிந்தன்.

அரவிந்தன் இரவில் அதிக நேரம் கண் விழிக்க நேரும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இருள் புலருமுன்பே எழுந்திருந்து நீராடிக் காலை வழக்கங்களை முடித்துக் கொண்டு தூய்மையடைந்து விடுவான். நீராடி உடை மாற்றிக் கொண்டு அச்சகத்து முன் அறையில் ஊதுவத்திகளைப் பொருத்திவிட்டு அந்த நறுமணச் சூழலில் அமர்ந்து எப்போதும் தன்னைவிட்டுப் பிரியாமலிருக்கும் சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகத்தை எடுத்துச் சிறிதுநேரம் ஆழ்ந்து படிப்பான். குறள் படித்து மனத்தில் தூய எண்ணங்களை வளர்த்துக்கொண்டபின் தன்னுடைய கவிதை நோட்டுப் புத்தகத்தையும், டைரியையும் எடுத்து அப்போதுள்ள துறு துறுப்பான எண்ணங்களில், எழுச்சியில் எவையேனும் கவிதைகளோ, புதிய சிந்தனைகளோ தோன்றினால் அவற்றை எழுதுவான். ஒவ்வொரு நாளும் இந்த விடியல் நேரத்துக்கு அவன் வாழ்வில் தனிச் சிறப்பு உண்டு. காலை நாலரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/386&oldid=556109" இலிருந்து மீள்விக்கப்பட்டது