பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 391

பொன்னகரத்துக்கும் சொல்லி அனுப்பினான் முருகானந்தம். அடி உதைகளில் இறங்கிக் கலவரம் விளைவிப்பது அரவிந்தனுக்குப் பிடிக்காத காரியம் என்பதை முருகானந்தம் அறிவான். ஆனால் அறத்தையும் நேர்மையையும் பற்றி வாய் ஓயாது பிதற்றிக் கொண்டிருக்கும் அரவிந்தனே கொடுமையின் வஞ்சகக் கூண்டில் மாட்டிக் கொண்டு கிடக்கும் போது வேறென்ன செய்ய முடியும்? முற்றிலும் கருணையாலேயே வாழ்வதற்கு இன்றைய உலகில் முடியாது. கருணை காட்ட வேண்டிய இடத்தில்தான் கருணை காண்பிக்க வேண்டும். இல்லாத இடத்தில் கன்னத்தில் அறைந்து தான் ஆகவேண்டும்' எனத் தனது வழக்கமான உணர்ச்சித் துடிப்பே முருகானந்தத்தின் மனத்தில் அப்போது விஞ்சி நின்றது. அரவிந்தன் பர்மாக்காரரிடம் அகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமில்லாமல் நம்பினான் அவன். ஆளையே எங்காவது கடத்திக் கொண்டு போய்ச் சிறை வைத்துக் கொண்டு தேர்தல் முடிகிறவரை வெளியே விடாமல் இருக்கவும் பர்மாக்காரர் தயங்க மாட்டார் என்பது அவனுக்குப் புரிந்தது. அவருடைய கடந்த கால அரசியல் வரலாறுகளில் அப்படி நடந்த சூழ்ச்சிகள் ஏராளமாயிற்றே!

மாலை மூன்று மணிக்குள் மல்யுத்தத்துக்காகக் கூடினவர்கள் போல ஐந்தாறு முரட்டு ஆட்கள் முருகானந்தத்தின் தையற் கடையில் கூடிவிட்டார்கள்.

'நம்ப பையன் மேலே எவண்டா கை வைச்சான்? சொல்லு; அப்படியே எலும்பு மார்க் பல்பொடி தயார் பண்ணி விடுகிறேன்' என்று முண்டாவை மடக்கிக் கொண்டு முருகானந் தத்திடம் கேட்டான் பெரிய பயில்வான். உடல் வலிமை மிக்க அந்தத் தோழர்களையெல்லாம் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு நடந்ததை விவரித்துச் சொல்லிக்கொண்டிருந்தான் முருகானந்தம்.

அந்த நேரத்தில் தொள தொளவென ஜிப்பா அணிந்து கொண்ட தோற்றத்தோடு கையில் தோல்பை ஏந்திய நெட்டை மனிதர் ஒருவர் தையற்கடைக்குள் படியேறி நுழைந்தார். தோல் பையின் நடுவில் மைக்கா உறையில் ஆர்.எஸ். பாண்டியன், நிருபர், தினச்சுடர் என்று பளிச்சென்று அச்சிட்ட அட்டை வைத்திருந்தது. "என்னப்பா முருகானந்தம் ஜிப்பாதைக்கத் துணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/393&oldid=556116" இலிருந்து மீள்விக்கப்பட்டது