பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 குறிஞ்சிமலர்

நான்கு பவுன் வளையல்கள் ஏறக்குறைய முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாகப் பழைய விலைப் பொருளாக எடுத்துக் கொண்டு பணத்தைக் எண்ணிக் கொடுத்தார்கள். பேசாமல் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்காரர் வீட்டுக்குப் போனாள். ஆறுமாத வாடகை பாக்கியைக் கொடுத்து இரசீது வாங்கிக் கொண்டு 'இந்த மாத முடிவுக்குள் காலி செய்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு வந்தாள். வளை போட்ட பணத்தில் ஏழு ரூபாயும் பழைய ஐந்து அனாவும் மடியில் இருந்தன.

அப்பாவுக்கு வேண்டியவரும் நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருமான பிரமுகர் ஒருவருடைய வீடு பக்கத்துத் தெருவிலே இருந்தது. அவர் நேர்மையானவர். போய் பார்த்துத் தன் நிலையைச் சொன்னால் ஏதாவது வேலைக்கு வழி செய்வார் என்று நம்பினாள் பூரணி. ஆனால் அங்கே போய் விசாரித்ததில் அவர் வெளியூர் போயிருப்பதாகவும், வர இரண்டு நாட்களாகுமென்றும் தெரிந்தது. வந்த பின் பார்த்துக் கொள்ள லாம் என்று திரும்பினாள்.

மறுபடியும் சென்ட்ரலுக்குப் போய்ப் பஸ் ஏறி அவள் திருப்பரங்குன்றத்தை அடைந்த போது இருள் மயங்கும் போதாகி விட்டது. குன்றின் உச்சியிலிருந்த மசூதிக்கருகில் நீல மின் விளக்கு ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தது. தெருவில் கோயிலுக்குப் போகும் கூட்டம் மிகுந்திருந்தது. தெருவில் தன் வீட்டு வாசலில் புத்தமும் கையுமாக நிறையப் பள்ளிக் கூடத்துப் பையன்கள் கூடி நிற்பதைப் பூரணி கண்டாள். குதிரை வண்டி ஒன்று நின்றிருந்தது. ஒதுவார்த் தாத்தாவும் இருந்தார்.

பூரணி வீட்டை நெருங்கியதும் ஒதுவார்த் தாத்தா, கவலையும் பரபரப்பும் நிறைந்த முகத்தோடு அவளை எதிர் கொண்டு வந்து சொன்னார்: 'உனக்கு இருக்கிற கவலையும், துக்கமும் பேதாதென்று சின்னத்தம்பி சம்பந்தன் பள்ளிக்கூடத்தில் மரமேறி விழுந்து கையை வேறு ஒடித்துக் கொண்டு வந்திருக்கிறான் அம்மா.......... * * -

பூரணி பையன்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வேகமாக ஓடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/40&oldid=555764" இலிருந்து மீள்விக்கப்பட்டது