பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 குறிஞ்சிமலர் அந்த ஆள் கூறியது மெய்தான் இரண்டு மூன்று அழுக்குக் காகிதங்களையே விரிப்பாக விரித்து வலதுகையைத் தலையணை போல் மடித்து வைத்துக் கொண்டு அறைக்குள் சுருண்டு துவண்டு படுத்துக் கொண்டிருந்தான் அரவிந்தன். கைவிளக்கின் ஒளி வட்டத்தில் இந்தப் பரிதாபக் காட்சியைக் கண்டபோது முருகானந்தத்துக்கும் நண்பர்களுக்கும் வேதனையாக இருந்தது. அருகில் சென்று அரவிந்தனை மெல்லக் தொட்டு எழுப்பினான். பாவம் பட்டினி போட்டிருப்பார்கள் பாவிகள். கதவுப் பூட்டைப் பெயர்த்துத் திறக்கிற ஓசை கேட்டுக்கூட எழுந்திருக்கவில்லை!" என்றான் முருகானந்தத்துடன் வந்திருந்த பெரிய பயில்வான்.

கண் விழித்து எழுந்த அரவிந்தனுக்கு, அந்த நேரத்தில் திடீரென்று அங்கே அவர்களைச் சந்தித்ததும் ஒன்றுமே விளங்க வில்லை. முருகானந்தம் அவசரம் அவசரமாகத் தன்னால் முடிந்த மட்டும் சுருக்கமாய் விளக்கி விட்டு, 'இப்போது முதலில் இங்கிருந்து தப்பிச் சென்றாக வேண்டும். விடிந்து வெளிச்சம் பரவுகிற நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. மற்றவற்றை அச்சகத்துக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம். முதலில் புறப்படு! உடனே இங்கிருந்து வெளியேறாவிட்டால் வம்பு' என்று அரவிந்தனை அவசரப்படுத்தினான்.

'நீ செய்கிற காரியம் நியாயமில்லை, முருகானந்தம். என்னை இவ்வளவு பத்திரமாக இங்கே கொண்டு வந்து வைத்திருப்பவர்களிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் இப்படி இரகசியமாக மீட்டுக்கொண்டு போக முயல்கிறாயே அப்பா!' என்று சிரித்துக் கொண்டு கேலியாகக் கூறியபடி அவர்களோடு புறப்பட்டான் அரவிந்தன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற சாயலும் அழகும், பொலிவும், ஒளியும் நிறைந்த அரவிந்தனின் முகம் சோர்ந்து வாடியிருந்தது. அப்போது நண்பர்களைச் சந்தித்ததும் சிரிக்கிற சிரிப்பாக ஏதோ சிரித்துப் பேசினானே ஒழியச் சோர்வு நன்றாகத் தெரிந்தது. தளர்ச்சி தெளிவாகப் புலப்பட்டது.

வண்டிகள் அச்சகத்து வாயிலில் திரும்பி வந்து நின்ற போது விடிந்து ஒளி பரவிக் கொண்டிருந்தது. பக்கத்து வெற்றிலைப் பாக்குக் கடைகளின் முன் அன்றைய தினச்சுடர் செய்தித் தாளின் தலைப்பு விளம்பரத் (போஸ்டர்) தாளிலேயே தேர்தல் பகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/400&oldid=556123" இலிருந்து மீள்விக்கப்பட்டது