பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 குறிஞ்சிமலர்

'சுத்த அசட்டுத் தனம்'

'இருக்கலாம்! ஆனால் இப்படி ஒர் அசட்டுத்தனத்தைத் தொடர்ந்து செய்யும் மகாத்மாக்கள் காந்திக்குப் பின் இல்லாததால் தான் இந்த நாடு எப்படியோ போய்க் கொண்டிருக்கிறது. '

'என்னதான் லட்சியம் இருந்தாலும் நடைமுறையை ஒத்துக்கொண்டு அதன்படிப் போகவேண்டும் அரவிந்தன்! விளம்பரம் செய்யாமல் தேர்தலுக்கு நின்று பயனே இல்லை!"

'நேர்மையாகவும் சத்தியமாகவும் தகுதியுடனும் நாம் இருப்பதே நமக்குப் பெரிய விளம்பரம்தான் முருகானந்தம்'

'பேச்சுக்கு இதெல்லாம் சரி. ஆனால் உலகியல் தெரிந்து செய்யாமலிருந்தால் ஒன்றும் நம்ப முடியாது!"

‘'நீ முன் அறையில் இரு, முருகானந்தம்! நான் குளித்து விட்டு வந்துவிடுகிறேன்' என்று கூறிக்கொண்டே ஜிப்பாவைக் கழற்றிய அரவிந்தனின் முதுகைப் பார்த்த முருகானந்தம் திகைத்தான். சட்டையைக் கழற்றிவிட்டு அரவிந்தன் உட்கார்ந் திருக்கும்போது பார்த்தால் நெருப்புச் சோதி போல் வளமாக மின்னும் அவனது சிவந்த ம்ேனி. எலுமிச்சம்பழத்தின் மஞ்சள் நிறத் தளதளப்புள்ள மேனி அது. அத்தகைய அழகிய நிறத்துக்கு நடுவே முதுகில் இரண்டு கரிய கோடுகள் கன்றிச் சிவந்து தெரிந்தன.

'என்னப்பா இது?’ என்று கேட்டவாறு அந்த இடத்தைக் தொட்டுக்காட்டி வினவினான் முருகானந்தம், அவன் குரல் கொதிப்பின் எல்லையைக் காட்டியது.

'ஒன்றுமில்லை! சவுக்கடியப்பா, சவுக்கு அடி. நியாயத்தை எடுத்துச் சொல்லி வாதிட்டதற்காக ஒரு பெரிய மனிதர் கொடுத்த பரிசுகள் இவை!' என்று நிதானமாகப் பதில் சொன்னான் அரவிந்தன். முருகானந்தத்துக்குக் கண்கள் சிவந்தன. இரத்தம் கொதித்தது. அவன் உதடுகள் ஏதோ ஆவேசமாகக் கூறத் துடித்தன. அப்போது கவலையைக் காட்டும் முகபாவத்துடன் அங்கே நிருபர் பாண்டியன் வந்து நின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/404&oldid=556127" இலிருந்து மீள்விக்கப்பட்டது